கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 10 திரிந்து போன இராவணனின் வரங்கள்

யுத்த காண்டம், இராவணன் வதைப் படலத்தில், மண்டோதரி இராவணன் மேல் விழுந்து அழும் காட்சியை கவியரசர் கீழ்க்கண்டவாறு விவரிக் கிறார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(காய் 4 / மா தேமா)

அரைகடையிட் டமைவுற்ற முக்கோடி ஆயுவும்முன்
..அறிஞர்க் கேயும்
உரைகடையிட் டளப்பரிய பேராற்றல் தோளாற்றற்
..குலப்போ இல்லை;
திரைகடையிட் டளப்பரிய வரமென்னும் பாற்கடலைச்
..சீதை என்னும்
பிரைகடையிட் டழிப்பதனை அறிந்தேனோ தவப்பயனின்
..பெருமை பார்ப்பேன். 303

- இராவணன் வதைப் படலம், யுத்த காண்டம், ராமாயணம்


பொருளுரை:

”அரையைக் கடைசியாகக் கொண்டு அமைந்த மூன்று கோடி ஆயுளுக்கும், பெருமை பெற்ற அறிஞர்கள் எல்லாம் கூடி அவன் ஆற்றலை சொல்லப் புகுந்தாலும் சொல்ல முடியாத அளவுக்கு வாய் வார்த்கைகளால் முடிவு செய்து அளக்க முடியாத பெருவலிமை கொண்ட உன் தோள் ஆற்றலுக்கு அழிவு இல்லை என்று நினைத்திருந் தேன்.

தவங்களின் பயனாய் வந்த வரங்களின் பெருக்கத்தை எண்ணிப் பெருமை கொண்டிருந் தவளாகிய நான் அலைகளின் முடிவு காட்டி அளக்க முடியாத உன் வரங்கள் ஆகிய பாற்கடலை சீதா தேவியாகிய பிரையானது இறுதியில் இடப்பட்டு அழிக்கப் போவதனை அறிந்தேன் இல்லையே!” என்று மண்டோதரி இராவணன் மேல் விழுந்து அழுதாள்.

நல்ல குணங்கள் எவ்வளவு இருந்தாலும், ஒரே ஒரு கெட்ட குணம் இருந்தால் அந்த கெட்ட குணம் எல்லா நல்ல குணங்களையும் அழித்து விடும். பால் எவ்வளவு இருந்தாலும், அதில் ஒரு துளி தயிரை விட்டால் அது திரிந்து போகும்.

அது போல, இராவணனின் அளவற்ற வரங்கள் என்னும் பாற் கடலில், சீதை என்ற ஒரு துளி பட்டதும் அது திரிந்து போயிற்று என்று இந்தப் பாடலில் புலம்புகிறாள் மண்டோதரி.

இராவணன் பெற்ற வரம் பாற்கடல் போல் விரிந்திருந்தும் சீதையென்னும் சிறு பிரைத் துளியால் பாற்கடல் முழுதும் அழிந்து கெட்டது என்று கவியரசர் உருவகித்தார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-20, 1:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

மேலே