கொட்டைப் பாக்கு

'கொட்டைப் பாக்கு என்று தொடங்கி, களிப்பாக்கு என்று முடியும் படியாகப் பொருட் செறிவுடன் வெண்பா ஒன்று கூறுக’ என்றார் ஒருவர்.

நேரிசை வெண்பா
(ஏந்திசைச் செப்பல் ஓசை)

கொட்டைப்பாக் கும்மொருகண் கூடையைப்பாக் கும்மடியில்
பிட்டைப்பாக் கும்பாகம் பெண்பார்க்கும் - முட்டநெஞ்சே
ஆரணனும் நாரணனும் ஆதிமறை யுந்தேடும்
காரணனைக் கண்டுகளிப் பாக்கு. 22

– கவி காளமேகம்

இப்படி அகங்காரம் கொள்ளாமல், சிவபெருமானைத் தரிசிப்பதிலே மனம் செலுத்துவாயாக என்று சொல்லுபவரைப் போல உரைத்தார் கவிஞர்.

பொருளுரை:

மனமே! மதுரையிலே வந்தபின் ஏவற்படி மண்சுமக்கச் சென்று மண்வெட்டியைப் பார்த்திருந்தோனும், ஒரு கண்ணினாலே கூடையைப் பார்த்தோனும்,

தன் மடியிலுள்ள பிட்டினை நோக்குவோனும், தன் இடப்பாகத்துள்ள தேவியைப் பார்ப்போனும்,

பிரமனும் திருமாலும் ஆதிப்பழமறையும் தேடிக் கொண்டிருப்போனுமான சர்வ காரணனாகிய பரமசிவனைக் கண்டு தரிசித்து முற்றவும் மகிழ்தலைச் செய்வாயாக என்கிறார் கவி காளமேகம்.

பார்க்கும் என்று சொல் பாக்கும் என மருவியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-20, 12:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

மேலே