செம்பொருளும் வெண்பொருளும் மருவி ஓங்கி நிலவும் உலகு – செல்வம், தருமதீபிகை 570

நேரிசை வெண்பா

செம்பொருள் என்று சிவனுக் கொருபெயர்காண்
செம்பொருளும் வெண்பொருளும் சேர்ந்துமே – நும்பொருள்
ஈங்கு மருவி யிருத்தலால் நும்பொருள்
ஓங்கி நிலவும் உலகு. 570

- செல்வம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிவபெருமானுக்குச் செம்பொருள் என்றொரு பெயருள்ளது. செம்பொருளும், வெண்பொருளும் சேர்ந்து நும்பொருள் பெருகியுள்ளமையால் உமது புகழ் உலகில் ஓங்கி உலாவும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பொருள் என்னும் சொல் அரிய பல பொருள்களை மருவியுள்ளது கண்ணெதிரே காண்கின்ற யாவும் பொருளென வரினும், எண்ணி மதிக்கத்தக்கனவே இனிய பொருள்களாய்த் தனி எழுகின்றன. மனிதனுடைய அனுபவங்களை மருவி வரும் அளவு அவை பெருமை பெறுகின்றன. நெல், கோதுமை, சோளம், துவரை, உளுந்து ஆகியவை உணவுப் பொருட்கள்; இரும்பு, ஈயம், செம்பு, வெள்ளி, தங்கம் ஆகியன அனுபோகப் பொருள் வகைகளாய் அமைகின்றன. மாடு, நிலம், வீடு, வாகனம் ஆகியனை வாழ்வின் இனிய வசதிப் பொருட்களாய் உள்ளன.

முன்காலத்தில் பெரும்பாலும் நிகழ்ந்து வந்த பண்ட மாற்றுகளுக்குப் பதிலாக வாணிக முறையில் நாணய மாற்றுகள் நிகழ்ந்தன. வெள்ளியும், பொன்னும் பெருமதிப்புகளை அடைந்தன. முத்து, வைரம், மரகதம், பவளம், மாணிக்கம், கோமேதகம், வைடூர்யம், நீலம், புட்பராகம் ஆகிய நவமணிகள் உயர்ந்த அணிகளை அழகு செய்து சிறந்த செல்வங்களாய் விளங்கின. இத்தகைய எல்லாப் பொருள்களும் செல்வம் என்னும் பேரால் சிறந்து நிற்கின்றன. எல்லாச் செல்வங்களையும் என்றும் இயல்பாகவே உடையவனாதலால் ஈசனுக்குச் ‘செல்வன்’ என்று ஓர் செல்லப் பெயர் வந்தது.

’செல்வன் சேவடி சென்று தொழுமினே' என்று அப்பர் இப்படி அருளியிருக்கிறார்.

ஈசன் உருவாய் எண்ணப்பட்டுள்ள இத்தகைய செல்வத்தை மனிதன் பெறவில்லையானால் அவன் பிறப்பு பிழையாயிழிந்து பீழை படுகின்றது. செம்பொருள், வெண்பொருள் என்றது தங்கக் காசுகளையும், வெள்ளி நாணயங்களையும் குறிக்கின்றது.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானை' எனச் சிவபெருமானை நோக்கிச் சுந்தரமூர்த்தி நாயனார் இங்ஙனம் துதித்திருக்கிறார். மறுமை நிலையைக் கருதி உருகியுள்ளவரும் இம்மையில் சிறந்த போக போக்கியங்களையும் உயர்ந்த பாக்கியங்களையும் விழைந்திருக்கின்றனர். தேகமுடையவர் போகமடையவே நேர்கின்றனர்; ஆகவே அதனை அருளி வருகிற பொருளில் மோகமடைந்து நிற்கின்றனர்.

எல்லா ஐசுவரியங்களையுமுடைய ஈசுவரனை நோக்கி அரிய தவங்களைச் செய்து மேலோர் பெரிய செல்வங்களைப் பெற்றிருக்கின்றனர். அத்தகைய தவங்களை யாவரும் நேரே செய்ய, முடியாது. மனிதனுக்கு உடைய வாழ்நாள் அருமை மிகவுடையது. தத்தமக்கு இயன்றவாறு கருமங்களைச் செய்து வந்தால் அவ்வழிகளால் செல்வங்கள் வந்து சேர்கின்றன. மனிதன் செய்யும் நற்றொழில்கள் தெய்வ ஒளியாய்த் தேசு மிகுந்து வருகின்றன. வினை செய்யாதிருந்தால் அந் நேரம் வெய்யதாய் விளிந்து ஒழிகின்றது.

மனிதனுக்கு அமைந்துள்ள வாழ்நாள் அருமை மிக வுடையது. அதனைப் பழுதாகக் கழிப்பவர் பாழ்படுகின்றனர். ஒவ்வொரு கணமும் பொருளும் புகழும் புண்ணியமும் மணந்து வரும்படி புரிந்து வந்தால், அந்த மனித வாழ்வு பெருமகிமை அடைகின்றது.

உற்ற பொழுதை உயர்பயன் ஆக்கிவரின்
கற்ற கலையின் கரைகண்டான் - பெற்ற
பிறவிப் பெரும்பயனைப் பெற்றான் பெரிய
அறவன் அவனே அறி.

பொருளைப் பழுதுபடுத்திப் பாழாக்காமல் அதனை விழுமிய செல்வமாக மாற்றிக் கொள்பவர் உயர்ந்த பாக்கியவான்களாய்ச் சிறந்து திகழ்கின்றனர்.

இந்த வையக வாழ்வு சுகமாயமைய வேண்டுமாயின் அதற்குப் பொருள் அவசியம்,

ஊக்கி முயலும் உறுதி நலங்களெல்லாம் பாக்கியங்களாகி வரும். இதனை நோக்கி உணர்ந்து ஆக்கம் அடைக.

வினை, விதி, கருமம், பால், ஊழ் என்னும் மொழிகள் மனிதனுடைய செயல்களிலிருந்து விளைந்து வந்துள்ளன. நல்ல குறிக்கோள்களோடு உள்ளம் துணிந்து முயன்றால் செல்வங்கள் உளவாகி சிறப்புகள் சேர்கின்றன.

முயற்சி, சாகசம், தைரியம், அறிவு, ஆற்றல், பராக்கிரமம் ஆகிய ஆறும் எங்கே இருக்கின்றனவோ அங்கே தெய்வம் துணை புரிகிறது.

மனிதன் செய்கின்ற கருமம் தெய்வத்தின் பிரியத்தையும் செல்வத்தையும் அடைந்து கொள்ளுகின்றதாதலால் நீ கருதி முயன்று பெரிய திருவுடையனாகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
.
நேரிசை வெண்பா

செல்வம் பெறவேண்டின் செய்க முயற்சியை
வல்விரைந்து செய்க வருமதுவே – செல்வம்
முயற்சியில் உள்ள முறைதெரியின் அன்றே
உயர்ச்சி அடையும் உனை.

வாழ்வின் உயிர்நிலை செல்வத்தில் உள்ளது; அந்தச் செல்வம் அவரது ஆள்வினையில் அமைந்திருக்கிறது. இவ்வுண்மையை ஆழ்ந்து சிந்தித்து செம்மையாய் முயன்று நன்மைகளை நாடிக்கொள் எனப்படுகிறது.

நேரிசை வெண்பா

பொருள்இல் ஒருவற்(கு) இளமையும், போற்றும்
அருள்இல் ஒருவற்(கு) அறனும், - தெருளான்
திரிந்தாளும் நெஞ்சினான் கல்வியும், மூன்றும்
பரிந்தாலும் செய்யா பயன். (புறத்திரட்டு. 1228) 2 திரிகடுகம்

செல்வமும் கல்வியும் அருளும் அறமும் மருவியுள்ள பொழுதுதான் மனித வாழ்வு புனிதமாய் மகிமையடைந்து மிளிர்கின்றது. இனிய நீர்மைகளையும் அரிய சீர்மைகளையும் உரிமையாக எய்தி உயர் இன்பம் பெறவேண்டும்.

பொருளில்லாதவனின் இளமை, பிற உயிர்களிடன் இரக்கமும் அருட்குணமும் இல்லாதவனின் அறன், நிலையற்றுத் திரியும் நெஞ்சையுடைவனின் கல்வி ஆகியவற்றால் எந்த பயனுமில்லை எனவும், அரிய நீர்மைகளையும், அரிய சீர்மைகளையும் எய்தி உயர் இன்பம் பெறுக எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-20, 3:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 113

மேலே