இரவு

துவளவைக்கும் துக்கங்கள் தொலையவேண்டி பரிதவித்து காத்திருக்கும் தூக்கத்தின் தர்மசங்கடங்களை கடக்காத இரவுகளை கொண்டோர் இங்கே யார்?

இளம்பிறையின் கீழ்ப் பக்கவாட்டில் ஒற்றை நட்சத்திரத்துடன் அந்தியில் ஆரம்பமாகும் இரவின் ரம்மியத்தில் சூழும் ஏகாந்த இருள் பூமிக்கான பெருங்குடை. விடியும்வரை மடிகொடுத்து பூலோகை இளைப்பாற்றும் சகாய சாமரமாகும் அருங்கொடை.

வசதியுடையுவராகட்டும் வறியோராகடடும்… பால்ய பருவம் போல் சுபிட்சமான இரவுகள் எவருக்கும் இறுதிவரை அமைவதில்லை.

இரைச்சலற்ற சாந்த இரவில் விழித்திருந்து ரம்மியமான சிந்தனைகளை கற்பனைக்குள்ளாக்கும் கவிஞன், இரவின் நீட்சியை மேலும் மேலும் வேண்டி விரும்புகிறான் அந்த இரவு பகலரிதாரம் பூசிய நிழல் தேவதையாக அவனை சூழ்கிறது. பகலின் மெழுகை இரவின் தீபத்தில் மிக சாவகாசமாய் உருக்குகிறான் அந்த கலைஞன்

இரவின் இயக்கங்கள் மகத்துவமானது

ஓசைகளின் அருவத்தில் ஒளிந்து, அமைதியின் சொரூபத்தில் தஞ்சமடைகிறது இரவு. நிலவை அழகுப்படுத்துவதும் விண்மீண்களை அலங்கரிப்பதும் இரவே. இரவின் அனுகூலமின்றி கடல் அலைகளுக்கு பொன்முலாம் பூசமுடியுமா வெள்ளிநிலவால்! இரவின் அவகாசத்தால் மரங்களில் கட்டமைக்கப்படும் பறவைகளின் சரணாலயங்கள் பிராணவாயுவின் புகலிடங்களாகிறது

தாயின் தாலாட்டினை மகோன்னத நிலைக்கு இட்டுச் செல்கிறது இரவு. அவ்வேளையில்… அன்னையற்ற குழந்தைகள் தங்களை தேடி வந்து தாயாத்மாக்கள் வருடிப்போவதை உணர்கின்றனர்.

மகனை எதிர்பார்த்து காத்திருக்கும் தாய் பசியற்றிருப்பதன் காரணம், அவன் வரும் வரை அவனை கருவாய் மீண்டும் தன் வயிற்றில் சுமந்திருப்பதால்தான்.

ஆத்மார்த்த பிறப்புகளின் பிரசவ கூடங்களாகி நிற்கிறது இரவு.

மறைந்திருந்த வரங்களை தேடி, ஆர்ப்பரிப்பின்றி முற்றுகையிட்ட இரவின் தவங்களில் ஞானமுக்தி அடைந்த மகான்களின் பிரசன்னம் காலாவதியானதன் பிண்ணனியை இரவே அறியக்கடவது.

‘இரவை பகலாக்கும்’ - என்ற உவமானம் ஏற்றதல்ல. இரவை உன்னதப்படுத்தும் என்பதே உரிய வார்த்தை. ஆம் வாணவேடிக்கைகள் இரவை அலங்கரிக்கத்தானே செய்கின்றன பெருநகரங்களி்ன் ஓடுதளத்தை விட்டு மேலெழும்பும் விமானம் வாயிலாக தாழநோக்கும் பார்வையில் மின்விளக்குகளின் ஏகாந்த அலங்காரங்களை சொர்க்கதின் சாயலாக சுட்டிக்காட்டுகிறது இரவு..

ஆர்க்கெஸ்ட்ரா எனப்படும் இன்னிசை விருந்தாகட்டும் நாடக, கலாசார கூத்து நிகழ்ச்சிகளாகட்டும் அவற்றை களைகட்டவும் அவற்றால் களைகட்டப்படவும் இரவு அவசியமாகிறது. தேர்பவனியிலும் சப்பரத்திலும் சந்தனக் கூட்டிலும் இறை-தேவ-ஆண்டவரை உன்னத ஊர்வலமாய் நடத்திச் செல்கிறது இரவு

இரவின் விடுவிப்பை யோகிகள் விடியலில் கண்டடைவதில்லை. இரவின் காற்றில் உலக மாயைகளை கரைத்து இரவின் இருளில் அலைபாயல்களை அலைகழித்து இரவின் வரையறைக்குள் அத்வைதம் அடைந்து விடுபடுகின்றனர்.

இரவின் மயக்கங்கள் இரவாலேயே தெளிவிக்கப்படுகிறது. இரவின் மௌனத்தில் இரவு சம்மதமடைகிறது. இரவின் மடியில் உறங்க ஆரம்பிக்கும் உலகம் இரவை துயிலெழுப்பி அனுபப்பி வைக்கிறது அனுதினமும்

இரவின் உறக்கம் தரும் பரிபூரண திருப்தியை இரவுப் பணியாளர்களுக்கு பகல் உறக்கம் தருவதில்லை.

உறங்கிக் கொண்டிருக்கும் சில நூறு பிரயாணிகளை சுமந்தவாறு மாநில எல்லைகலை கடக்கும் ரயில் ஓட்டுநரின் இரவும் நெடுஞ்சாலைகளில் இருள் புடைசூழ கடக்கும் பேருந்து ஓட்டுநரின் இரவும் உயிர்களுக்கு உத்திரவாதம் கொடுத்தபடி விழித்திருப்பதை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

சொந்த நாட்டில் உடைமைகளையும் உறவுகளையும் இழந்து, சென்று சேரும் நாடு ஏற்குமா? என்ற உத்தரவாதமின்றி அகதியாய் பட்டினியுடன் கடலில் கடக்கும் இரவுகளை தாங்கிக் கொள்ளும் மனநிலை எவ்வளவு கொடுமையானது!

இரவோடு இரவாக என்று கூறுவதுபோல் பகலோடு பகலாக என்று கூற வாய்ப்பிருப்பதில்லை. இங்கே இரவு கடக்கும் முன்பாகவே அது கடத்தப்படுகிறது

பாலியல் தொழிலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் வல்லுறவில் பேசப்பட்ட பேரங்களின் தீர்க்கப்படாத நிலுவைகளில் சீழ் கட்டி வீங்கிய சூட்டுக்கட்டியாக வலியுடன் ஒளிந்து நிற்கிறது இரவு.

ஈசலின் ஆயுளை நிர்ணயிக்கும் ஏகோபித்த அதிகாரத்தை கடக்கும் இரவில் கண்ணடித்து மறைகின்றன நிலையாமையின் அருகாமைகள்

தேவகுமாரனின் பிறப்புக்காக குளுமையான இரவில் வாடைக்காற்றுடன் நாம் காத்திருப்பதும் அவரின் உயிர்த்தெழலுக்காக கோடைக்காலத்தில் வெட்கைமிக்க இரவில் காத்திருப்பதையும் எதார்த்தமாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை.

இரவு அமைதியின் உறைவிடம். ஆனால் தைரியத்தின் கடிவாளம். அச்சத்தின் அச்சாரம். அசாதாரண சூழ்நிலைகளை பகலில் எதிர்கொள்வது போல் இரவில் ஏதுவாவதில்லை. இரவின் நிசப்த பரியந்தம் ஆவேச உணர்வுகளை அமுக்குகிறது இரவின் மென்மை சி்ங்கத்தின் பிடறியை மயிலிறகாக்கிவிடுகிறது.

கள்வர்கள் தங்கள் பிழைப்புக்கான விடியலை இரவின் சுருக்குப்பைக்குள் புகுந்து தேட வருகின்றனர். தீட்டப்பட்ட சதிகள் தங்கள் திமிலை சிலுப்பிக்கொண்டு அசுரவேகத்தில் பாய்வதற்காக இரவுக்காக காத்திருக்கின்றன. வழிப்பறிக் கொள்ளைகளுக்கு பயந்து ஒத்திப்போடப்படும் பிரயாணங்களில் இரவின் அமானுஷ்யம் தெறித்து நிற்கிறது.

பெற்றோரின் ஆழ்ந்த உறக்கத்தை நோட்டமிட்டவாறு பின்னிரவில் புறப்பட்டு காதலனுடன் வைகையில் ஊர் தாண்டும் கன்னிப் பெண்கள்… தனக்கு நன்றி கூறாததை நினைத்து இரவு வருத்தப்படுமா!?

தற்காலிக மரணங்களான உறக்கங்களில்…. இரவு வியாபிக்கும் விளங்கா கனவுகளில் அசல் மரணத்தின் சூட்சுமங்கள் புதைந்துள்ளன. நிலையாமைக்குள் கட்டுக்கடங்கி நிரந்திரமின்மையை தினமும் நம்முள் கட்டமைத்து போகிறது இரவு

நள்ளிரவுகளில் விரைந்தோடும் அவசர ஊர்திகளின் ஓசையால், கலையும் உறக்கங்களில் இரவின் அகாலம் திகிலூட்டும் கனவுகளுக்கு ஒத்ததாய் உள்ளது. தூக்கமாத்திரைகளுக்காக பிடிவாதமிடு்ம் உறக்கங்கள் மீது இரவு பாரபட்சம் காட்டுவதாய் அதனுடன் மனஸ்தாபப்பட்டு விழுங்குகின்றனர்.

நிகழவிருக்கும் மரணத்திற்கு கட்டியம் கூறும்விதமாய் எங்கோ தூரத்திலிருந்து கேட்கப்படும் நாயின் அவல ஓலம் கட்டுக்கதையாக்கப்பட்டதன் பிண்ணனியில் இரவின் தனிமை அருவருக்கப்படுகிறது.

பகலுக்குப் பூட்டுப் போட்டு அதன் சாவியை மீண்டும் பகலிடமே இரவு ஒப்படைக்கப்படும் வரை காவலாளி்களின் மடியில் ஓய்வெடுக்கும் இரவின் நம்பிக்கையில் அவர்களின் கடமையுணர்வுகள் பெருமிதமடைகின்றன.

வெகுநேரமான பின்னும உறக்கம் பிடிக்காமல் மனைவியிடம் நீண்டுகொண்டுபோகும் அன்பார்ந்த பேச்சுகளால் அவளை ஆதர்ச காதலியாக்கி அவனிடம் ஒப்படைக்கிறது இரவு. தொய்வடையாத விழிகளில் கொஞ்ச கொஞ்சமாய் தொலைந்து போகிறது உறக்கம்.. ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரிடம் கேட்கப்படும் ஒரே கேள்விக்கு ஒரே பதில்தான்… “இல்லை எனக்கு உறக்கம் வரவில்லை. குளிர்ச்சிக்கு உகந்ததாயிருந்த இரவின் போர்வை குளிர்காயலாகுகிறது அப்போது.. விடியக் காத்திருக்கும் பொழுதிடம் முடிய மறுக்கும் இரவு இறைஞ்சி நிற்கிறது

இரவை இரட்டிப்பாக்கி அழகுப் பார்க்கும் கேளிக்கைக் கொண்டாட்டங்களின் ஒளிப்படலங்கள் இரவின் பிரியாவிடையை இரவின் வரவேற்பில் முகாமிட்டுப் போகின்றன. இருளை புறந்தள்ளும் ஒளிவீச்சுக் கதிர்களால் சுத்திகரிக்கப்படும் இரவு, ஒய்யாரமாய் சுவீகாரமடைகிறது விழாக்களில்.

அறியாமை என்பது இருளில் இரைந்து கிடக்கும் வெள்ளிக் காசுகள் மட்டுமல்ல. பகலில் கதிரவனால் மறைக்கப்பட்ட நட்சத்திரங்கள் கூட., ஆம். இரைந்து கிடக்கும் வெள்ளிக் காசுகளாய் கண்டுகொள்ளாமல் இருக்கும் அறியாமையை விட மறைக்கப்பட்ட நட்சத்திரங்களாய் இருட்டடிப்பு செய்யப்படும் அறியாமைகள்தான ஆபத்தானவை. இருளால் நிர்வாணம் மறைக்கப்பட்ட பகலின் சூட்சுமங்கள் இரவின் பூடகமான சிந்தனைகளால் தோலுரிக்கப்படுகின்றன.

நம் நடையோடு பயணம் செய்யும் நிலவு, கண்முன்னே விழுந்து காணாமல் போன விண்மீன், அவசரமாய் கலைந்துபோகும் மேகம், அறிகுறியின்றி வரும் சிறுமழை, எதிர்பாரா தருணத்தில் நீங்கும் மின்தடை.. என இரவு நம்மோடு ஆடும் கண்ணாமூச்சி ஆட்டங்கள் அலாதியானவை..

வாத்தியங்களிலிருந்து அருவமாய் வெளிப்படும் இசைபோல… .இளங்காற்றின சலனங்களில் அசைபடும் இரவின் உருவம் பூலோகத்தை உல்லாசமாய் தாலாட்டுகிறது. தென்றல் கண்சிமிட்டுவதற்கு ஏதுவாய் இருந்து தேன்நிலவை நாணப்படவைக்கிறது இரவு.

இரவின் ஆளுமையை அதன் தோழமையில் உணருபவர்களால்தான் இரவின் சகாக்களாக இருக்கமுடியும். பகல் உடலென்றால் இரவு அதன் ஆத்மா. இரவின் சுவாசமே பகல் உயிரின் ஜீவித ஆதாரம்.

இரவுக்கு மிகப் பொருத்தமான வார்த்தை – “நன்றி மீண்டும் வருக”

-----------------------------------------------------------

எழுதியவர் : யேசுராஜ் (7-Feb-20, 7:51 pm)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : iravu
பார்வை : 134

மேலே