கரியும் உமியும்

‘கரி என்று தொடங்கி உமி என்று முடியும்படி ஒரு வெண்பாச் சொல்லுக' என்றனர் ஒருவர். அதனை ஏற்றும் பாடிய வெண்பா இது.

நேரிசை வெண்பா

கரியதனை யேயுரித்த கையா வளையேந்
தரியயற்கும் எட்டாத வையா - பரிவாக
அண்டரெல்லாம் கூடி யமுதம் கடைந்தபொழு
துண்டநஞ்சை இங்கே உமி. 23

– கவி காளமேகம்

பொருளுரை:

யானையையே உரித்த கையினை உடையவனே! சங்குதனை ஏந்துவானான திருமாலுக்கும் அயனுக்கும் எல்லை காண முடியாதிருந்த ஐயனே! தேவர்கள் எல்லாரும் விருப்பமுடனே ஒன்றுகூடி அமுதம் கடைந்த அந்த நாளிலே நீ அவர்களைக் காக்கும் பொருட்டாக உண்ட அந்தக் கொடிய நஞ்சினை இவ்விடத்தே உமிழ்ந்து விடுவாயாக என்கிறார் கவி காளமேகம்.

'ஐயா என்றது அனைவருக்கும் தந்தையாவான் அவனே என்ற உரிமை பற்றியும், அவன் அழகனும் தெய்வத்தன்மை உயைடவனும் ஆதல் பற்றியும் ஆகும்.

'அந்த நஞ்சை இவ்விடத்தே உமிழ்க’ என்றதனால், தேவர்களை அழியாது காக்குவே நீ நஞ்சினை உண்டனை; இவர்கள் அகங்காரங் கொண்டோர் ஆயினர்; அதனால் இவர்கள் அழியுமாறு இவ்விடத்தே அதனை உமிழ்க என்று உரைத்ததும் ஆம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Feb-20, 4:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 111

மேலே