சீத்துப் பூத்து

'சீத்துப் பூத்து' என்று வரும்படி ஒரு வெண்பாவைச் சொல்லுக' என்று கேட்டார் ஒருவர். அப்படியே உரைக்கும் கவிஞர், சிவபெருமானின் திருமுடிமேல் விளங்கும் பிறையை நோக்கி, அவன் ஆபரணமான பாம்பு எப்பொழுதும் சீத்துப் பூத்தென்று சீறிக் கொண்டிருக்கும் என்று கற்பித்துப் பாடினார்.

அதே போன்று ‘வானத்துப் பிறைபோல விளங்கும் எம்மை நோக்கி நச்சரவமான நீரும் சீத்துப் பூத்தென்கின்றீர்” என்று பழிப்பது போன்றமைந்த உட்பொருளும் ஆகும்.

நேரிசை வெண்பா

அப்பூருஞ் செஞ்சடைமேல் அம்புலியைப் பார்த்துப்பார்த்(து)
எப்போதும் சீத்துப்பூத் தென்னவே - முப்போதும்
வாலங்காட் டாநிற்கும் வாயங்கா வாநிற்கும்
ஆலங்காட் டான்பூண் அரா. 24

– கவி காளமேகம்

திருவாலங்காட்டிலே கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான் பூண்டிருக்கும் பாம்பானது கங்கை தங்கியிருக்கும் செஞ்சடையின் மேலாக விளங்கும் இளம் பிறையைப் பார்த்து எப்பொழுதும் சீத்துப் பூத்தென்று முக்காலும் அவ்விடத்தே வாலாட்டிக் கொண் டிருக்கும்; வாயினைப் பிளந்தவாறும் இருக்கும்.

அராவின் அறியாமைக்குக் கேட்டவரின் அறியாமை உவமையாக ஆயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Feb-20, 11:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 91

மேலே