சின்னஞ்சிறு வயசு நினைவலைகள் 3
நினைவு பெயர் : நானொரு நாய்க்குட்டி பிரியன்
எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து
என் வீட்டில் ஆடு மாடுகள் வளர்ப்பு இருந்ததா என்றால்
நிச்சயம் தெரியாது - ஆனால்
நாய்க்குட்டிகள் இல்லாத தருணமில்லை...!
சாலையோரத்தில் என் கூரைவீடு - அதில்
வாழ்ந்த இன்பமான நாட்களுக்கு ஈடு இணையேது?
டாக்கா என்றொரு நாய்க்குட்டி;
அதையடுத்து சுள்ளான் என்ற பெயரோடு ஒன்று;
இவையிரண்டும் அக்கால சிங்க பெண்கள்
என்பது போல பெண் குட்டிகள்;
நிலைத்து வாழ்ந்து முதுமைக்கு பின்னே
உயிர்நீத்தன டாக்காவும் சுள்ளானும்;
ஆண் நாய்க்குட்டிகளே
என் வீட்டு வளர்ப்பாய் அதிகமிருந்திருக்கும்;
ஆனால் ஆயுள் மட்டும் குறைவாய்
காரணம் சாலையோரத்து என் வீடு;
சாலையோரம் எனது வீடென்பதால்
நிறைய குட்டிகள் விபத்துக்குள்ளாகி இறப்பதும்
சோகத்தால் என் வீடே அழுது கிடப்பதும்
அழுகையை மறக்க அடுத்ததொரு
குட்டி தூக்கி வளர்ப்பதும்
தொடர்மழை அடித்தாற்போன்ற நினைவலைகள்...;
டைகர் என்றொரு முரட்டுக்குட்டி
நன்றிக்கு அடையாளமாய்;
விளையாட்டாய் என் தோலில் தட்டிய
நண்பனொருவனை -அவன்
என்னை அடித்துவிட்டான் என்றெண்ணி
தொடையில் கவ்வியது;
அவன் கால்சட்டையை சேர்த்து கவ்வியதால்
காயமின்றி தப்பித்தான் நண்பன்;
டைகருக்கு ஒரு வயதிருக்கும் - அது
லாரி சக்கரத்தில் சிக்கி எங்கள் கண்முன்னே
பலியான போது,
அதன் பிரிவு எடுத்துச்சென்றது மனமகிழ்ச்சியை...!
வடித்துச்சென்றது ஏராளமான கண்ணீர்த்துளிகளை...!
வெள்ளையன் என்றொரு வெண்ணிற குட்டி
செல்லமென வளர்க்க
நாய்பிடிக்கும் வண்டியில் தெரியாமல்
மாட்டிக்கொண்டு மடிந்துபோனான்;
தமிழ் பால் விளம்பரத்திலிருக்கும் பசு வடிவில்
கருப்பும் வெள்ளையும் கலந்தாற்போல்
ஒரு அழகு குட்டி;
கண்ணாய் வளர்ந்த அவன் கண்ணிமைக்கும் நேரத்தில்
சாலையில் குறுக்கே ஓடி விபத்தில் உயிர் தொலைத்தான்;
இது நாயல்ல நரி எனக்கூறும் விதத்தில்
லொள் லொள் குறைப்பு நரியின் தந்திரமென
கலவையாய் அடுத்ததொரு வளர்ப்பு;
வேட்டையன் என்ற பெயரோடு...
ஆனால் வேட்டையன் காணாமல் போய்விட்டான்
யார் அதை வேட்டையாடியது எனத்தெரியாமலே!
குறைக்கும் போது குழந்தையின் குரலில் ஒரு குட்டி
அதற்கு பெயரே குட்டிதான்;
பந்தை உருட்டிவிட்டாலும் சரி
பனங்காயை உருட்டிவிட்டாலும் சரி
ஓடோடிச்சென்று எடுத்துவந்து
கையில் கொடுக்கும்
அந்த குட்டியை நினைவுபடுத்தி கொண்டேயிருக்கும்
காவலன் படத்தில் வரும் வடிவேல் வளர்ப்பு;
மூன்றுமாதமே இருந்த குட்டி
நோய்தாக்கி காலமானான் எங்களை
நோகடித்துவிட்டு!
ஷியாம் என்றொருவன்; ஷாடோ என்றொருவன்;
பிளாக்கி என்றொருவன்; ஜாக்கி என்றொருவன்;
என 'என்றொருவன்' பட்டியலில்
பெயரிடப்படா வளர்ப்புகளாய் நிறைய நிறைய..!
எல்லாம் என் வீட்டு கொல்லைப்புறத்தில் உறங்கிட்டு
சமாதிகளாய் பதிவுசெய்கிறது
இன்றும் எனது நினைவலைகளில்!
காசு கொடுத்து கடையில் வாங்கி -
சங்கிலியில் கட்டி நடைபயணம் பழக்கி
உணவாய் பெடிக்ரி ரொட்டி துண்டுகள் போட்டு
பணக்கார வீடுகளின் முற்றத்தில்
காவலுக்கு கட்டிப்போட்டிருப்பார்களே
அந்த வகையல்ல என் வீட்டு வளர்ப்புகள்;
சாலையோரத்தில் அனாதைகளாய் சுற்றித்திரியும்
குட்டிகளை அடித்துவிரட்டும் பலருக்கு மத்தியில்
அதை அப்படியே தூக்கிவந்து அம்மாவிடம் கொடுத்து
சவுக்காரத்தை போட்டு குளிப்பாட்டி
பாலும் மேரி ரொட்டி துண்டுகளும் உண்ண செய்து
யாம் உண்ணும் உணவையே தினம் அதற்கு கொடுத்து
அம்மாவின் கிழிந்துபோன புடவையை
படுக்கை மடிப்பாய் அதற்கு உருவாக்கி
சிறப்பாய் வளர்க்கப்பட்டவைகள்
என் வீட்டு வளர்ப்பு குட்டிகள்;
இன்றும் என் வீட்டில் இரண்டு குட்டிகள்
ஒன்று ஜாக்கி 2; மற்றொன்று ஹெர்லி;
அது என்ன ஜாக்கி2...?
சினிமாவில் மட்டும்தான் பாகம் இரண்டா
என் வீட்டு வளர்ப்புகளிலும்...!
ஆனால் இப்போதெல்லாம் குட்டிகளுக்கு
இரண்டடுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
சாலையில் சிக்கிடாதவாறு;
-மன்னை சுரேஷ்