கரோனா தடுப்பூசி

கரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தக்கூடிய மருந்தை அமெரிக்காவில் கண்டுபிடித்து விட்டதாக கூறப்படும் காணொளியை நமது தமிழ் சமூகம் பகிர்ந்துவருவது சிந்திக்க வைக்கிறது!

இதனால் இது பற்றிய சிறு விளக்கத்தை எனக்குத் தெரிந்த அறிவியல்சார்ந்த விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

2014 ஆம் ஆண்டு எபோலா என்ற வைரஸ் ஆபிரிக்க நாட்டில் உருவாகி கிட்டத்தட்ட 11000 உயிர்களை காவு கொண்டபோது உலக வல்லாதிக்க நாடுகள் ஒன்றிணைந்து ஒரு முடிவு எடுத்துக் கொண்டது. அதாவது CEPI ( Coalition for Epidemic Preparedness Innovations) என்கின்ற ஒரு கூட்டு ஆய்வு அமைப்பை உருவாக்கியது. இதை உருவாக்கிய பின்னணியில் இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, நோர்வே ஆகிய நாடுகளும் மற்றும் Bill & Melinda Gates Foundation னும் இருக்கின்றன. இதனைத்தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளும் இதில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டன.

இந்த அமைப்பினுடைய நோக்கம் என்னவென்றால் பல நாடுகளிலும் இருக்கும் ஆய்வு நிலையங்களை ஒன்றிணைப்பதே ஆகும். இதன் அடிப்படையில் எபோலா வைரஷ் தொற்று நோய்க்கான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் பல நாடுகளிலும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. இதன் விளைவாக 2017 ஆண்டு எபோலாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போது, அதற்கான தேவையும் இல்லாதொழிந்திருந்தது. ஆனாலும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் வெற்றி கண்டிருந்தது, நோர்வேயிலுள்ள ஆய்வு நிறுவனம்.

இன்று கரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதற்கான முயற்சியின் முதற்கட்டமாக CEBI அமைப்பு பல நாடுகளிற்கும் அழைப்பு விடுத்தபோது 50 ஆய்வு நிலையங்கள் முன்வந்து தம்மை பதிவு செய்து கொண்டன. இதில் இன்று 8 ஆய்வு நிலையங்கள் அதற்கான முயற்சியை ஆரம்பித்திருக்கின்ற நிலையில் 3 நாடுகள் அதாவது அமெரிக்கா, அவுத்திராலியா, ஜேர்மனி ஆகியன முன்னிலையில் இருக்கின்றன.

அதாவது ஒரு மருந்தை கண்டு பிடிக்கும் முயற்சி நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது.

1) கரோனா வைரசின் மாதிரியை உருவாக்குவது.

2) உருவாக்கிய மாதிரியை குறிப்பிட்ட சூழலில் உள்ள ஆரோக்கியமான 50 பேரை தேர்ந்தெடுத்து ( அவர்களின் விருப்பத்தோடு) அவர்களுக்கு கொடுத்து ( injection) அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவது. அதாவது இரத்தப் பரிசோதனை மூலம் அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்தல், குறிப்பாக பக்க விளைவுகள், அனுகூலமான முடிவுகள், எதிர்ப்புசக்தியை பெற்றுக்கொள்வதற்கான மருந்தின் அளவு என்பன இதன் மூலம் தீர்மானிக்கப்படும்.

3) இரண்டாம் கட்டத்தில் வெற்றி பெற்றால் மூன்றாம் கட்ட நிலையாக; எந்த நாட்டில் வைரஷின் தொற்று அதிகமாக இருக்கிறதோ அந்த நாட்டில் உள்ள 100 ஆரோக்கியமானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து (50:50 ) ஒரு குழுவிற்கு இந்த பரிசோதனை மருந்தைக் கொடுத்து, மற்றைய குழுவிற்கு வெறும் இனிப்பு கலந்த திரவத்தைக் கொடுத்து இவர்களை நோய்தொற்று அதிகமுள்ள பிரதேசத்தில் உலாவ விட்டு இவர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தை அவதானித்தல்.

4) மூன்றாம் கட்டத்தில் சாதகமான பலன் கிடைத்தால், உலக சுகாதார அமைப்பு ( WHO), UNICEF ஆகியவற்றின் உதவியை நாடி இந்த மருந்தை பெருந்தொகையாக உற்பத்தி செய்வதற்கான நிதி உதவி, மற்றும் எல்லா நாடுகளுக்கும் இந்த தடுப்பு மருந்து சமமான முறையில் சென்றடைவதற்கான உதவியையும் கோருதல்.

ஆகவே இக்காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல ஆய்வு நிலையங்கள் தங்கள் பணியை ஆரம்பித்தாலும் இரண்டாம் கட்டத்திலோ அல்லது மூன்றாம் கட்டத்திலோ மாற்றங்கள் ஏற்பட்டு, எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில் அதாவது பாரிய பக்க விளைவுகள் அல்லது வேறு காரணங்களுக்காக மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம்.

இங்கு எந்த ஆய்வு நிலையம் முதலில் வெற்றிகரமாக இவற்றை செய்து முடித்து அனுமதியை பெற்றுக்கொள்ளப்போகின்றது என்பதுதான் விறுவிறுப்பாக உள்ளது. சாதாரணமாக இந்த பரிசோதனைக் காலமானது 12 மாதங்களிலிருந்து 18 மாதங்கள் வரை எடுக்கும்.
.......
யோகராணி கணேசன்
B.E in biotechnology & Chemical engineering
22.March.2020

எழுதியவர் : யோகராணி கணேசன் (23-Mar-20, 9:44 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே