பூசுணிக்காயும் பரமசிவனும்

நேரிசை வெண்பா

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்
பூசுணிக்கா யீசனெனப் போற்று. 68

- கவி காளமேகம்

பொருளுரை:

பூசுணிக்காயையும் ஈசன் என்று கருதிப் போற்றுக, எதனாலெனின்,

பூசுணிக்காயானது:

அடிப் பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதனாலும், உடல் வெளுத்து, ஒரு பக்கத்தே கொடியினையும் கொண்டதாகி, அழகான வெண்சுண்ணத்தை மேற்புறத்தே கொண்டு வளைவான தழும்புகளையும் பெற்றிருப்பதனாலும்,

பரமசிவன்:

திருவடியிலே நந்திப் பெருமான் சேர்ந்திருத்தலாலும், திருநீறணிந்து உடல் வெள்ளை நிறமாகத் தோன்றுதலாலும், தன் ஒரு பாகத்திலே பூங்கொடியான உமையினைக் கொண்டிருப்பதனாலும், சிறந்த பாம்பாபரணத்தைக் கொண்டிருப்பதனாலும், தன் திருமேனியிடத்தே தழுவுங் காலத்தே அம்மையின் வளையல்கள் அழுத்திய தழும்புகளை உடையவரா யிருப்பதனாலும் என்கிறார் கவி காளமேகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-20, 8:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

சிறந்த கட்டுரைகள்

மேலே