வண்ணமிலா ஒன்று

வண்ணமிலா ஒன்று

வண்ணமிலா ஒன்று
ஆழியிலிருந்து
ஆவியாகக் கிளம்பி
அலையும்
வெண்மேகம் நிரப்பி
ஒரு வண்ணம் சேர்க்கும்
அது கருமை!

வண்ணமிலா ஒன்று
வானின்று ஒழுகி
மண்ணெங்கும் பரவி
மண்ணடி வரையும் சென்று
கொண்டு வந்து சேர்த்த வண்ணம்
கண்ணிற்கு குளுமையான பச்சை!

வண்ணமிலா ஒன்று
அருவியாய் வழிந்து
நதியாக ஓடி
பலதரப்பிருந்தும் சென்று
ஒன்று கூடி சேர்ந்து
ஓரிடத்தில்
கொட்டி வைத்த வண்ணம்
மனதிற்கு இனிதான
நீலம்!

வண்ணமிலா ஒன்று
மலையினின்று அருவியாய்ப் பாய்கையிலே
கடற்கரை ஓரந்தனில்
புரண்டு புரண்டு படுக்கையிலே
நுரைகளில் திரண்டு நிற்க செய்யும் வண்ணம்
பால் போல வெண்மை!

வண்ணமிலா ஒன்றே
உயிர்களில் ஓடி ஓடி
உலவுகையில்
கொள்ளும் நிறம் செம்மை!

வண்ணமிலா ஒன்று
மழையாய்
வரும் வேளைகளில்
கானமயில் தோகை
விரித்து காட்டும்
கவின்வண்ணம்!
வான்பரிதி வானவில்லாய்
சிரித்து காட்டும்
ஏழுவண்ணம்!

வண்ணமிலா ஒன்றே வண்ணங்கள் இறைக்குது
ஒன்றுமிலா ஒன்றே இறை ஆன உலகில்...

வண்ணமிலா அவ்வொன்று
பஞ்சபூதங்களில் ஒன்று!
பிரபஞ்சத்தில் அழைக்கப்படுகிறது
தண்ணீர்.. தண்ணீர்... என்று...

எழுதியவர் : Usharanikannabiran (23-Mar-20, 10:11 pm)
பார்வை : 58

மேலே