oru corona kavithai
அறிமுகம்:
பரபரப்பு அடங்கியது.
படபடப்பு தொடங்கியது.
உலகம் ஒருங்கிணைய
பலவழிகள் சிந்தித்தனர்...
மதம், வணிகம் என பல முனைந்திடினும்
கிட்டியது வாய்ப்பு கொரோனாவிற்கு!!
தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ..
அண்டங் குலுங்குது, நினைவில் வந்து போகிறான் பாரதி!!
எத்தனை உயிரிழப்பு!!
திட்டங்கள் குலைந்தன,
கனவுகள் சரிந்தன,
வணிக வங்கியும் சரிவில் சேர்ந்தது!!
சிலரின் புறக்கணிப்பு - ஆதாரமானது
சவப்பெட்டியின் பெருக்கெடுப்பு!!
போர்க்களமானது பூமி!!
(1)
மேல்தட்டின் பாதிப்பு:
மேல் நாடுகள் பெரிய பரப்பில்
சிறிய மக்களினம் கொண்டிருக்க
அடுக்கடுக்காய் கிருமி பரவினும்
வளம் மூலம் வைத்தியம் பெருக்க
சக்தி கொண்டவை !!
சமூகம் தனிமை காப்பின்
வென்று விடலாம் விஷத்தை - நம்
கண் முன் ஆதாரம் சிலவுண்டு!!
மேல் தட்டு மக்களும்
இருக்கையிலிருந்தே இணையத்தால்
பதவியும், பணியும்
பாதுகாக்கலாம் - ஆதலின்
தனிமை காக்க !!
(2)
கீழ்த்தட்டின் பாதிப்பு:
கிருமியின் பெரும் பாதிப்பு
கீழ்த்தட்டிற்கே!
எம் பாரதம் உட்பட்ட சில நாடுகளில்
மக்கள் பரப்பு அடர்த்தியானது.
திக்கு கலங்கிவிடும் அங்கே!
உன் பெருக்கெடுப்புக்கு தயாராகவில்லை
பாமரக் கூட்டம் !
தினக்கூலிக்கும் பிழைப்பிற்கும்
இணையமும் துணையாகாது,
விட்டுப் போ விஷமே!!
கற்றது என்ன:
காலத்தின் கூத்து படிப்பித்தன சில,
நாங்கள் ஒற்றுமையை உணர்கிறோம்
கண்மூடித்தனமான ஓட்டம் குறைகிறது,
கரிசனமற்ற இதயங்கள் சற்றே இளகுகிறன,
வெளி உலகப் பார்வை விரிவடைகிறது,
உள்ளுலகத் தேடல் பெருகுகிறது,
மத்த்தின் மேல் கொண்ட ‘மதம்’ குறைகிறது,
மொத்தத்தில் மனித இனம்
‘என்’ என்பதை சற்றே எட்டி வைத்து
நுண்ணுயிரும் உலகை உலுக்குமெனில்
எவ்வினமும் எவ்வுயிரும் மேலானதே - என
அறியத் தொடங்குகிறது!!
இன்னும் என்ன கற்பிக்க காத்திருக்கிறாய்
பாசாங்குருவத்தில் ஆசானே!
போதும் போய்விடு!!
என்ன செய்யலாம்:
ஜல்லிக் கட்டிலும், வெள்ளப் பெருக்கிலும்
ஒருங்கிணைந்த நம் சக்தி
ஒருமித்து தனித்திருக்கட்டும்
தனிமை வெல்லட்டும் விஷத்தை - எனினும்
கிருமி படிப்பித்ததை நினைவிலிடுவோம்.
சமூக நலன் கருதி தனித்திருக்கும் போது
எழுதியது 🙏