காதலுக்கு ஈமைச் சடங்கு
அந்த திருமணம்
வித்தியாசமானது..!
வாழ்க்கைக் கனவுகளை
வாழையாக்கி வாசலிலே
கட்டிவைத்திருந்தது
கண்ணீரை பன்னீராக்கி
வரவேற்பில் வைத்திருந்தது
சந்தனத்தில் சாதியை
குழப்பி வைத்திருந்தது
கற்கண்டில் கனவுகள்
கண்ணுக்குத் தெரியாமல்
அடைக்கப்பட்டு பின் படைக்கப்பட்டு
இனத்தவர் வாயிலே
அரைபட்டுக்கொண்டது
அதிசயம் யாதெனில்
அழுதே விழுந்த
கண்ணீர்த் துளியில்
துளிர்விட்டு முளைத்த
செடியின் பூக்களால்
அலங்கரிக்கப் பட்ட
அழகிய மேடை
காதலை சாம்பலாக்க
சுடர்விட்டு எரிந்தது
யாகத்தில் சா(தீ)..!
கௌரவ சாயம்
முகத்தில் பூசி
தற்கொலை மிரட்டலே
அணிகலனாய்
ஏற்று
இதயம் செத்தவள்
சதை நின்றது
மணப்பெண் கோலத்தில்..
இதயம் சொட்டிய
கண்ணீர்க் குருதியை
பணக்காரச்
செருப்பால்
அழித்தபடி
பல் தெரிய சிரித்தது
பவுன் கணக்கில்
தங்கம்
காதலின் முடிவு
இரு ரகம்
கல்யாணம் கண்ட
காதலை
அறுத்து அழித்தால்
ஆணவக் கொலை
உண்மை தெரியுமா..?
செத்த காதலுக்கு
செய்யும்
ஈமைச் சடங்கே
கௌரவத் திருமணம்..!!