வண்ணப் பாடல்

தனன தான தானான
தனன தான தானான
தனன தான தானான தனனானா

மலையின் மீது கார்மேக
முரசி யாட வேநீல
மயிலு மாட மானோடி விளையாடும் !

வளியி லாடு பூவோடு
கிளைக ளாட வேரோடு
மரமு மாட வாகாக மனமாடும் !

அலைக ளோடு சேலாட
மதகு தாவி நீரோட
அருவி பாயு தேயாடி யிசையோடே !

அழகு நீள வாலோடு
கவிக ளோடி யேயாட
அருகி லேப லாவாசம் நுகராயோ !

இலையெ னாத சீரோடு
நிலவு லாவு வான்மீதில்
இரவு நேர மீனோடு முகிலாட !

இடைய றாது பேசாமல்
அமைதி யோடு பூபாளம்
இதய ராக மேபாட விதுவேளை !

நிலையி லாத வாழ்வோடு
புவியில் மாய நோயோடு
நிலவும் வாதை யேதீர வழியேது ?

நெடிய மாலை யேபாட
விலகி யோடு மேசோகம்
நிலையும் மாற வேயாடி வருவோனே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Mar-20, 1:39 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 41

மேலே