குமரேச சதகம் - வணிகர் இயல்பு – பாடல் 4

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கொண்டபடி போலும்விலை பேசிலா பம்சிறிது
கூடிவர நயமுரைப்பார்;
கொள்ளுமொரு முதலுக்கு மோசம்வ ராதபடி
குறுகவே செலவுசெய்வார்;

வண்டப் புரட்டர் தாம் முறிதந்து, பொன் அடகு
வைக்கினும் கடன்ஈந்திடார்;
மருவுநா ணயமுளோர் கேட்டனுப் புகினுமவர்
வார்த்தையில் எலாம்கொடுப்பார்;

கண்டெழுது பற்றுவர வினின்மயிர் பிளந்தே
கணக்கில் அணு வாகிலும்விடார்;
காசுவீ ணிற்செல விடார் உசித மானதிற்
கனதிரவி யங்கள்விடுவார்;

மண்டலத் தூடுகன வர்த்தகம் செய்கின்ற
வணிகர்க்கு முறைமையிதுகாண்
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே! 4

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு மலைமேவு குமரேசனே!

வாங்கிய (விலைப்)படியில் உள்ளவாறு விலைகூறிச் சிறிது ஊதியம் வரும்படி இனிமையாகப் பேசுவார்; தாங்கள் வைத்துக்கொண்ட முதலுக்குக் கேடு வராவண்ணம் செட்டாகச் செலவு செய்வார்கள்;

இழிந்த பொய் வஞ்சகம் முதலான குணமுள்ளவர்கள் ஒப்பந்தச் சீட்டு எழுதிக் கொடுத்துப் பொன்னை ஈடாக வைத்தாலும் கடன் கொடார்; பொருந்திய ஒழுங்குள்ளவர்கள் சொல்லி விட்டாலும் அவர்கள் சொல்லுக்கே கேட்டவற்றை யெல்லாம் கொடுப்பார்கள்;

பார்த்து எழுதுகின்ற பற்றிலும் வரவிலும் மயிரளவாகினும் பிரித்தறிந்து பார்த்து அணுவாகிலும் கணக்குப் பிறழ விடமாட்டார்; வீண் வழிகளிலே காசைச் செலவழியார்; நல்ல நெறியில் மிகுந்த பொருளைச் செலவிடுவார்; நாட்டிலே பெருவணிகம் செய்கின்ற வணிகருக்கு இவை இயல்பாகும்.

அருஞ்சொற்கள்:

படி - பிரதி, கொண்டபடி - வாங்கிய விலையைக் குறித்திருக்கும் பிரதி,
வண்டர் - இழிந்தவர், புரட்டர் - புரட்டுச் செய்வோர், பொய்யர் - வஞ்சகர். முறி - ஒப்பந்தச் சீட்டு.
உசிதம் - தக்கது.

கருத்து:

வணிகர் மிக்க ஊதியம் விரும்பாமலும், வரவுக்கேற்ற செலவு செய்தும், நாணயத்துடனும், கணக்குப் பிறழாமலும் ஈட்டிய பொருளை நல்ல வழியிற் செலவிட்டும் வாழ வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Apr-20, 5:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 90

மேலே