அம்மாவின் தாலி

காலையிலிருந்து அம்மா அழுதபடியே இருந்தாள் நான் பள்ளிக்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தேன் அப்பா வீட்டில் இல்லை. நான் குளித்து சீருடை அணிந்து சாப்பிடும் பொருட்டு அவள் முன் சென்று அமர

அவள் தட்டை எடுத்து சாதம் போட்டு குழம்பு ஊத்தினாள்

சோற்றை வாயில் போட்டபடியே கேட்டேன்

ஏம்மா அழுவுற

அவள் முகத்தை சேலையால் துடைத்துக் கொண்டு ஒன்னுமில்ல நீ சாப்பிடு என இன்னும் கொஞ்சம் குழம்பு ஊற்றினால்

பின் அவள் முகத்தை அலம்பி வருவதாக கையை ஊன்றி எழுந்தாள். நான் சாப்பிட்டு கைகழுவி வெளி வரும் போது அம்மா தன் தாலி தொலைந்து போய் விட்டதாக விசும்பி அழுதவாறே எதிர்வீட்டு பானு அக்காவிடம் கூறிக்கொண்டிருந்தாள்

அவள் பதிலுக்கு உச் கொட்டிக் கொண்டிருந்தாள்

அம்மா என்னை பார்த்ததும் முகத்தை துடைத்துக் கொண்டு பார்த்து போயிட்டு வாப்பா என விடைகொடுத்தாள். நான் சைக்கிளை மிதித்து வெளிவரும் போது அவள் அழுகுரல் சன்னமாக கேட்டது.

மனம் ஒருநிலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்தது.

நான் மெயின் ரோட்டு பக்கம் செல்லும் போது சாலையில் யாரோ விபத்தில் படுகாயம் அடைந்திருப்பதாக கூறிக்கொண்டிருந்தனர்

நான் அலைமோதிய கூட்டத்தை விலக்கி பார்ப்பதற்குள் அடிப்பட்ட நபரை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.

பள்ளி இடைவேளையின் போது என் அப்பாவுக்கு அடிப்பட்டு ஆஸ்பிடலில் அனுமதித்திருப்பதாக பானு அக்கா செய்தி கொண்டு வந்தாள்.நான் புத்தகப்பையை சுமந்து கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடோடினேன்

அங்கு பிணவறை வாயிலில் தலைவிரி கோலமாக அம்மா அழுதுகொண்டு இருந்தாள்.நான் அவள் அருகே அழுதபடியே செல்ல அவள் இன்னும் பலத்த சத்தமாக அழுதவாறே

உங்க அப்பா நம்மள அனாதையா விட்டுட்டு போயிட்டாருடா

அப்போது அருகே வந்த ஒருவர் அப்பா பாடியை எடுத்துச் செல்ல சூரிட்டி கையெழுத்து போட அம்மாவை அழைத்துச் சென்றார்

அம்மா என்னை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு அவள் கையிலிருந்த அப்பாவின் சட்டையை என்னிடம் தந்துவிட்டு சென்றாள்

சட்டை முழுதும் இரத்தம் காய்ந்து பரவியிருந்தது. அப்போது பாக்கெட்டிலிருந்து சல் சல் சத்தம் வர துளாவியதில் காட்டன் சீட்டு பேப்பர், உடைந்த சிகரெட் துண்டு, ஒன்றிரண்டு சில்லரைகள் மத்தியில் அம்மாவின் தொலைந்த தாலி இரத்தம் தோய ஊறிக் கிடந்தது

முற்றும்...

எழுதியவர் : S.Ra (10-Apr-20, 1:24 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : ammaavin thaali
பார்வை : 149

மேலே