குமரேச சதகம் - பிதாக்கள் – பாடல் 6
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தவமது செய்தேபெற் றெடுத்தவன் முதற்பிதா,
தனைவளர்த்த வன்ஒருபிதா,
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா,
சார்ந்தசற் குருவொருபிதா,
அவமறுத் தாள்கின்ற அரசொரு பிதா,நல்ல
ஆபத்து வேளைதன்னில்
அஞ்சல்என் றுற்றதயர் தீர்த்துளோன் ஒருபிதா,
அன்புள முனோன்ஒருபிதா,
கவளம்இடு மனைவியைப் பெற்றுளோன் ஒருபிதா,
கலிதவிர்த் தவன்ஒருபிதா,
காசினியில் இவரைநித் தம்பிதா என்றுளம்
கருதுவது நீதியாகும்
மவுலிதனில் மதியரவு புனைவிமலர் உதவுசிறு
மதலையென வருகுருபரா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே! 6
- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
மவுலிதனில் மதியரவு புனைவிமலர் உதவுசிறு மதலையென வருகுருபரா! மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!
தவம் புரிந்து ஈன்றெடுத்தவன் முதல்தந்தை, தன்னை வளர்த்தவன் மற்றொரு தந்தை, அருளுடன் கல்வியைக் கற்பித்தவன் ஒரு தந்தை, உயிர் நன்னிலை அடைய மறையை ஓதிக் கொடுத்தவன் ஒரு தந்தை,
துனபத்தை நீக்கிக் காப்பாற்றுகிற அரசன் ஒரு தந்தை, கொடிய இடையூறு வந்த காலத்தில் அஞ்சாதே என்று ஆதரவு கூறி நேர்ந்த வருத்தத்தை நீக்கியவன் ஒரு தந்தை, அன்புடைய தமையன் ஒரு தந்தை,
உணவு ஊட்டும் மனைவியை ஈன்றவன் ஒரு தந்தை, வறுமையைப் போக்கியவன் ஒரு தந்தை, உலகில்
இவர்களை எப்போதும் தந்தையர் என்று உள்ளத்திற் கொள்வது அறம் ஆகும்.
விளக்கவுரை:
முன்னோன் என்பது முனோன் என்று இடையில் எழுத்துக் குறைந்து வந்தது.
கவளம் - ஒரு பிடி; யானைக்கிடும் உணவையே கவளமென்று கூறுவது முன்னாள் வழக்கம்.
நாளடைவில் நாம் உண்ணும் உணவில் ஒருபிடிக்கும் வந்து வழங்கி விட்டது.
கலி - வறுமை. மவுலி - முடி; மதலை - மகன்.
குருபரன் - முருகன்; பரமனுக்கும் குருவாக இருந்ததனால் குருபரன் ஆனார்.
உலகியல் கற்பிப்பவன் ஓராசிரியன்; ஆன்மவியல் கற்பிப்பவன் மற்றோராசிரியன்; இவர்களைப்
போதகாசிரியன் எனவும் ஞானவாசிரியன் எனவும் கூறுவர்.
கருத்து:
பெற்றவனைப் போலவே வளர்த்தவன், கல்வி கற்பித்தவன், மறை சொல்லிக் கொடுத்தவன், அரசன், உற்ற இடத்தில் துணைசெய்தவன், தமையன், மனைவியின் தந்தை, வறுமையை நீக்கியவன் ஆகிய இவர்களும் ஒருவனுக்குத் தந்தை முறையில் வைத்து எண்ணத் தக்கவர்கள்.