மரணம்

இந்த பூமியில் நான் வீழ்ந்து
கிடக்கும் இதே பொழுதில்
தான் என் கண்களின்
பூமியில் நான்,
தாய் மடியில் தவழ்கிறேன்!
தந்தை தோளில் சரிகிறேன்!
அண்ணனோடு அலாதிச்
சண்டை புரிகிறேன்!
நண்பனோடு சில மதுத்
துளிகளை ருசிக்கிறேன்!
காதல் மடியில் முத்தம்
கொஞ்சுகிறேன்!
மனைவியின் கூந்தலுல்
பூவொன்றைச் சூடுகிறேன்!
என் மகள் என்மீதுதுதிர்த்த
முதற் புன்னகையில்
சிலிர்க்கிறேன்!

சில நொடிகளில் என் உயிர்
உடல் விட்டு பிரியக் கூடும்
அதற்கு முன்னதாக!
இன்னும் சில பொழுதுகள்
என் தந்தையோடும்
தாயோடும் யான் இருக்க
விரும்புகிறேன்!
என் மனைவியிடம் சொல்லி
விட்டேனும் பிரிய முனைகிறேன்
கடைசியாய் ஒரு தரம் என் மகள்
சிரிப்பை பார்க்க நினைக்கிறேன்!
நண்பனிடம் மதுவருந்த இனி
யானில்லை என்று உரைக்க
முயல்கிறேன்!

இதில் ஏதொன்றையும் அடையும்
பாக்கியம் எனக்கில்லை என்றும்
யான் அறிவேன்!

இந்தக் கும்மிருட்டில்
என் உடைமைகளைச்
சூரையாடிய இந்தக்
கொள்ளையர்கள்
என் உயிரையேனும்
விட்டு வைத்திருக்கலாம்
என்று எண்ணுகிறேன்!

என் உடலெங்கும் கீறிக்
கிழித்த வாட்காயங்கள்
வலியில்லை மீண்டும்
என் பிரியங்கள்
எனக்கில்லை என்பதுதான் !

வழியும் குருதியின் நாற்றம்
கொல்லவில்லை இனி
என் மனைவியின் கூந்தல்
வாசம் நுகர முடியாதென்பது தான்!

ஆம் நிச்சயமாய் நான் வாழ
ஆசைப்படுகிறேன்!

இந்தச் சாவு நான் ஏற்றதில்லை
சாவும் வயதும் எனக்கில்லை
இருந்தும் நான் சாகப் போகிறேன்!

இம் மரணம் அறிந்திருந்தால்!
இன்னும் கொஞ்சம் அன்பாயிருந்திருப்பேன்!
என் பொழுதுகளை என்
பிரியங்களோடு
கொண்டாடியிருப்பேன்!
என் சிறு மகள் ஆசைப்பட்ட
அந்த பொம்மையை அன்றே
அவள் கைகளில் கொடுத்திருப்பேன்!
என் தாயோடும் தந்தையோடும்
ஓரிரு நாட்களையேனும்
கடத்தியிருப்பேன்!
மதுக் கோப்பையில் கொஞ்சம்
அதிக மதுவை ஊற்றியிருப்பேன்!

இனி இதுவொன்றும் நிகழாது தானே!

இனியொரு பிறவி நான் கொண்டால்
நிச்சயமாய் என் அன்பானவர்களோடு மீப்பெரும் நினைவுகளை தரவல்ல பல
பொழுதுகளை அவசரமாய்ச்
சம்பாதிப்பேன்!

இப்படி ஒரு புலம்பலை அங்கேனும்
நிகழ்த்தாமல் மரிக்க என்னால்
முடியுமல்லவா?

இந்த மரணம் எனக்குரைப்பதும்
அன்பானவர்களோடு மீப்பெரும்
போதை தர வல்ல பல பொழுதுகளை
அவசரமாய்ச் சம்பாதி என்ற
ஒன்றைத்தான்😓

எழுதியவர் : கவியறியாதவன் (21-Apr-20, 12:28 pm)
சேர்த்தது : கவியறியாதவன்
Tanglish : maranam
பார்வை : 76

மேலே