13 மேனின்ற கடவுள் இன்றி மேதினி யில்லை - தெய்வம் உண்டு எனல் 7
அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடங்களில் காய்ச்சீர் அருகி வரலாம்)
வானின்றி மழையு மில்லை
..வயலின்றி விளைவு மில்லை
ஆனின்றி கன்று மில்லை
..அரியின்றி யொளியு மில்லை
கோனின்றிக் காவ லில்லை
..குமரர்தா யின்றி யில்லை
மேனின்ற கடவு ளின்றி
..மேதினி யில்லை மாதோ. 7
- தெய்வம் உண்டு எனல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மேகம் இல்லாமல் மழை இல்லை; வயல் இல்லாமல் விளைச்சல் இல்லை. பசு இல்லாமல் கன்று இல்லை. சூரியன் இல்லாமல் வெளிச்சமில்லை. அரசனில்லாமல் நாட்டிற்குப் பாதுகாப்பு இல்லை. தாயில்லாமல் பிள்ளைகள் இல்லை.
இவைபோல, மேலுலகத்தில் கடவுள் இல்லாமல் நாம் வாழும் இந்த உலகமுமில்லை, தெரிந்து கொள்ளுங்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
அரி - ஞாயிறு, சூரியன்.