என் பாட்டைப் பழிப்பது முறையைப் பழிப்பதாம் - அவையடக்கம் 6
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
விளம் வருமிடத்தில் மாங்காய்க் சீர் வரலாம்)
கோவிலைப் பழிக்கி னோரெண்
..குணனையும் பழித்த தொப்பாம்
காவினைப் பழிக்கின் ஆண்டார்
..கடிமலர்ப் பழித்த தொப்பாம்
வாவியைப் பழிக்கிற் கொண்ட
..வண்புனல் பழித்த தாமென்
பாவினைப் பழிக்கி னீதிப்
..பயனையும் பழித்த தாமே. 6
- அவையடக்கம்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கோவிலைப் பழிப்பது கடவுளைப் பழிப்பதாகும். சோலையைப் பழிப்பது அங்கு மணம் பரப்பும் அழகிய பூக்களைப் பழிப்பதாகும். குளத்தைப் பழிப்பது அருமையான தண்ணீரைப் பழிப்பதாகும். அதுபோல, என் பாட்டினைப் பழிப்பது நீதி முறை யையும், அதன் பயனையும் பழிப்பதாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
.
எண்குணன் - கடவுள். கா - சோலை. பா - பாட்டு.