நீ ஏழையானால்
சிவபெருமான் அடியவர்க்கு மிகமிக எளியவன். அந்த ஏழைமையாளனாகிய அவன் உள்ளத்தை வைத்து நிந்தாஸ்துதியாகப் பெருமானைப் பாட நினைக்கிறார் கவிஞர். தில்லைப் பெருமானைப் போற்றிய அத்தகைய சுவையுள்ள பாடல் இது.
நேரிசை வெண்பா
தாண்டி ஒருத்தி தலையின்மேல் ஏறாளோ
பூண்டசெருப் பாலொருவன் போடானோ- மீண்டொருவன்
வையானோ வின்முறிய மாட்டானோ தென்புலியூர்
ஐயாநீ யேழையா னால். 92
- கவி காளமேகம்
பொருளுரை:
அழகிய புலியூர் ஆகிய சிதம்பரத்திலே வீற்றிருக்கும் பெருமானே! நீ எளியவனானால், ஒருத்தி (கங்கை) குதித்து வந்து நின் தலைமீதும் ஏற்றிக்கொள்ள மாட்டாளோ? தன் காலிலே போட் டிருக்கும் செருப்பினாலேயே (கண்ணப்பனாகிய) ஒருவன் நின்னை அடிக்கவும் மாட்டானோ? மற்றுமொருவன் (பார்த்தன்) உம்மை வைய்யமாட்டானோ? வில் முறியும்படி அடிக்கவும் செய்யானோ? (மாட்டுதல் - அடித்து துன்புறுத்தல்)
பெருமானை எளியவன் என்று கருதியே இப்படி அவர்கள் துன்புறுத்தினார்கள் என்கிறார். இதனால் அடியார்க்கு எளியவனான நீ கங்கை, கண்ணப்பன், பார்த்தன் ஆகியோரின் அச்செயல்களைப் பொறுத்து அவர்களையும் ஆட்கொண்ட பெருமானாவாய் என வியந்து போற்றினரும் ஆம்