குமரேச சதகம் - உடல்நலத்துக்கு ஏது ஆனவை - பாடல் 19

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,
மறுவறு விரோசனந்தான்
வருடத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல்
வாரத் திரண்டுவிசையாம்

மூதறிவி னொடுதனது வயதினுக் கிளையவொரு
மொய்குழ லுடன்சையோகம்
முற்று தயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
முதிரா வழுக்கையிள நீர்

சாதத்தில் எவளாவா னாலும்பு சித்தபின்
தாகந் தனக்குவாங்கல்
தயையாக உண்டபின் உலாவல்லிவை மேலவர்
சரீரசுகம் ஆமென்பர்காண்

மாதவகு மாரிசா ரங்கத்து தித்தகுற
வள்ளிக்கு கந்தசரசா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 19

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

பெருந்தவம் புரிந்த மங்கையும் மான் வயிற்றிலே பிறந்தவளுமான வேடர் குல வள்ளியம்மையின் மனத்திற் கிசைந்த இனிய மணவாளனே! மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!

திங்களுக்கு இருமுறை பெண்களைக் கூடுவது, குற்றமற்ற வயிற்றுக்கழிவு மருந்து ஆண்டுக்கு இருமுறை, எண்ணெய் தலையில் தேய்த்து முழுகுவது வாரத்துக்கு இருமுறை,

பேரறிவு கொண்டு தன் வயதினும் இளைய அடர்த்தியான கூந்தலையுடைய ஒரு பெண்ணுடன் சேர்க்கை,
முதிர்ந்த தயிர், காய்ச்சிய பால், நீர்மிகுந்த மோர், உருக்கிய நெய், முற்றாத வழுக்கையை உடைய இளநீர்,

எவ்வளவு உணவானாலும் உண்டபிறகே நீர் பருகுதல், (உடம்பின் மேல்) இரக்கம் வைத்து உண்டபிறகு உலாவுதல் இவற்றை பெரியோர் உடல்நலந் தருபவையாகும் என்று கூறுவர்.

விளக்கவுரை:

திருமாலின் பெண்கள் இருவர் முருகனையடையத் தவஞ்செய்து வானவரிடம் தெய்வ யானையாக ஒருவரும், மான் வயிற்றிற் பிறந்து வேடர் குடியில் ஒருவருமாக வளர்ந்தனர். ஆகையால் வள்ளியம்மையை மாதவ குமாரி என்றார்.

சாரங்கம் - மான், சரசன் - இனியவன், புல்குதல் - தழுவுதல், மறு - குற்றம்,

விரோசனம் - வயிற்றுப் போக்கு மருந்து, மொய்த்தல் - நெருங்குதல் (அடத்தியாக இருத்தல்)

குழல் - கூந்தல், சையோகம் - சேர்க்கை,

உடம்பினிடம் உழைப்பு வாங்குவோர் அது நீடித்திருக்கவும் நினைக்க வேண்டுமாகையால் அதனிடம் இரக்கங் காட்டவேண்டும் என்பதற்காகத் தயையாக உலாவல் என்று கூறினார்.

கருத்து:

இச்செய்யுளிலே கூறப்பட்டவை உடல் நலந் தரக் கூடியவை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Apr-20, 6:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே