284 சேர்த்து வைத்த பணத்தால் கொடாக் கண்டன் உயிர் கொள்வர் – கடும்பற்று 13

கலிவிருத்தம்

சாங்காலையோர் பிசினன்பொரு டானஞ்செய வுன்னித்
தேங்கான்மொழி மனைமைந்தரை விளித்தானவர் தெரிந்தே
ஆங்காயவ னுரையாவித மவன்மேல்விழுந் தழுதார்
தாங்காதவ னுயிர்தீர்ந்தனன் தனம்போற்பகை யுளதோ. 13

– கடும்பற்று
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தான் சாகும்போது ஓர் உலோபி பொருளைத் தானம் செய்ய எண்ணித் தேன் போன்ற இனிய சொல் பேசும் மனைவியையும் மைந்தரையும் அழைத்தான். அவர்கள் அவன் கூப்பிடும் குறிப்பு உணர்ந்து அவ்விடத்தில் அவனது நோக்கத்தை அவன் சொல்ல விடாதபடி அவன் மேல் விழுந்து அழுதார்கள். அதைத் தாங்காமல் உடனே அவன் இறந்தான். அவனுடைய பணமே அவன் இறப்புக்குக் காரணமானதால், பணம் போல் கொடிய பகை வேறு உண்டோ” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

பிசினன் - உலோபி. தேம் - தேன். ஆங்கு - அவ்விடத்து. ஆயவன் - அப்படிப்பட்டவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Apr-20, 7:12 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

மேலே