தந்தை
பெண்பிள்ளை வளர்க்கின்ற தந்தை
பிரியமெலாம் சேர்த்துவைக்கும் சந்தை
உண்ணாமல் சேர்த்துவைத்து
ஒருவன்கை சேர்க்குமட்டும்
கண்ணுறங்கா திருப்பதவன் சிந்தை
*
இன்னொருவன் துணையாவா ளென்று
இறுமாப்போ டிருந்துவிடா தென்றும்
தன்னுயிரை கொடுத்துழைத்து
தக்கதெலாம் செயுந்தகப்பன்
புன்னகையில் துயர்மறைப்பா னன்று
*
பாடுபட்டுப் படிக்கவைக்கும் பெண்ணை
பத்திரமாய்க் காத்துவந்த கண்ணை
நீடுவாழ ஒருவனுக்கு
நேசமுடன் கொடுத்துவிட்டு
ஆடுமுளம் அனுபவிக்கும் புண்ணை
*
பிறந்தகத்தில் பெரிதுவக்கும் பேறு
பிரிதொருவன் தனைசேரு மாறு
துறந்துசெலும் வாழ்க்கைநிலை
துன்பமென வாகிடினும்
மறந்ததொரு தந்தையுண்டா கூறு
*