எதற்கு

பிறவி எதற்கு?
****************
விடிந்தது முனக்கொரு விளக்கொளி எதற்கு?
விடுமுறை யளித்ததன் விழிகளை முடக்கு
படிகிற பனித்துளி பரவச மிருக்கப்
பகலொடு இரவினைப் பதுக்குவ தெதற்கு?
கொடிகளில் சிரிக்கிற குளிர்மல ரிருக்க
குதிரையின் கனைப்புள கொடுநகை எதற்கு?
வடிகிற புனலிடை வடிவழ கிருக்க
வறட்சியி லுழல்கிற வயல்வெளி எதற்கு?
*
பழரச மளித்திடப் பலமர மிருக்கப்
பருகிடப் பிணிதரு மதுவுனக் கெதற்கு?
பழகிடு முறவுகள் பலமென விருக்கப்
பதருக ளுடனுனக் குறவுக லெதற்கு?
அழகொடு உடுத்திடப் புடவையு மிருக்க
அரைகுறை உடைகளில் கிழிசலு மெதற்கு?
குழவியி னெழிலொடு குறுநகை யிருக்க
குமுறிடு மெரிமலை குணமுனக் கெதற்கு?
*
வருடிட வருகிற வளியது மிருக்க
வலிமையைத் தகர்த்திடும் புகையிலை எதற்கு?
கருணையை பொழிகிற கடவுளு மிருக்க
கருடனில் நிழலொடு அடைக்கல மெதற்கு
குருடென இருக்கிற விழிகளை துறந்து
குருகுல மதுதரு மமுதினை பருகு
திருடரும் திருந்திட வழிகளு மிருக்கத்
திருந்திட மறுப்பவர்க கெதற்கினி பிறவி?
*
மெய்யன் நடராஜ் .

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Apr-24, 1:32 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 48

மேலே