27 இறையருள் உண்டேல் அச்சம் இல்லை - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 11

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பாரெலாம் பகைசெய் தாலும்
= பராபரன் கருணை யுண்டேல்
சாருமோர் துயரு முண்டோ
= தாயினு மினிய வையன்
சீரரு ளின்றேல் எண்ணில்
= தேர்கரி பரிப தாதிப்
பேரணி யுடைய மேனும்
= பிழைக்குமா றெவன்கொ னெஞ்சே. 11

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உலகமெல்லாம் பகைத்தாலும் கடவுள் திருவருள் நமக்கு இருக்குமானால் நம்மைச் சேரும் துன்பம் ஏதும் உண்டாகாது.

தாயினும் இனிய தந்தையாகிய அவன் அருள் இல்லாவிட்டால் கணக்கில்லாத தேர், யானை, குதிரை, காலாள் ஆகிய பெரும் அணிகளாகிய நால்வகைப் படையோடிருப்பினும் நாம் தப்புவது எப்படி என்று சொல் நெஞ்சே” என்றும், இறையருள் இருந்தால் அச்சம் இல்லை என்றும் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.

கரி - யானை. பரி - குதிரை. பதாதி - காலாள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Apr-20, 7:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே