இறப்பச் சிறிதென்னாது அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க – நாலடியார் 99

நேரிசை வெண்பா

இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும்
அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும். 99

- ஈகை, நாலடியார்

பொருளுரை:

நம்மிடமிருப்பது மிகவுஞ் சிறியது என்று கருதாமலும், இல்லை என்று மறுத்துவிடாமலும், எப்போதும் பயனுடைய தான அறத்தை அனைவரிடத்தும் செய்துவருக;

அச்செயல் வாயில்கள் தோறும் பிச்சையெடுக்கும் தவசியின் உண்கலத்திற் போல மெல்ல மெல்ல அறப்பயனை நிறைவாக்கிவிடும்.

கருத்து:

சிறிய உதவியாயினும் மாறாமற் செய்து வந்தால் மெல்ல மெல்லப் புண்ணியம் நிறைந்துவிடும்.

விளக்கம்:

வேறுபாடின்றி என்றற்கு ‘யார் மாட்டும்', என்றார்.

‘செய்க' என்றது ஈண்டுக் கொடுத்து வருக என்னும் பொருட்டு.

முறைப்புதவின் - முறையே வாயில்களில்; அஃதாவது வாயில்கடோறும் என்பது.‘புதவு' வாயில் என்னும் பொருட்டாதல்,

தவசியின் பிச்சைக் கலம் எடுத்துக் காட்டினமையின் புண்ணியமும் ஆற்றலோடு நிரம்புமென்பது கொள்ளப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் . (4-May-20, 10:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே