அடுக்கிய மூவுலகுங் கேட்குமே – நாலடியார் 100
இன்னிசை வெண்பா
கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல். 100
- ஈகை, நாலடியார்
பொருளுரை:
குறுங்கோலால் ஒலிக்கப்படும் கண்போன்ற இடத்தையுடைய முரசினது ஒலியைக் காத எல்லை வரையிலுள்ளோர் கேட்பர்;
இடித்து முழங்கிய மேகத்தினொலியை ஒரு யோசனை எல்லை வரையிலுள்ளோர் கேட்பர்;
தக்கோரால், ‘இவர் உதவி செய்தவர்' என்று மகிழ்ந்து கூறப்படும் புகழுரை அடுக்காகவுள்ள மூன்று உலகங்களில் உள்ளாரனைவருங் கேட்டு நிற்பர்.
கருத்து:
பிறர்க்கு உதவி செய்யும் வள்ளன்மையே ஒருவர்க்கு யாண்டும் புகழ் பரப்பும்.
விளக்கம்:
கடிப்பு - முரசறையுங் கோல்,
காதம் - ஏழரை நாழிகை வழி யென்ப.
முழங்கியதென்பது முழங்கிய ஒலியென்னும் பொருட்டாதலின் ஈண்டுப் பெயர். சிந்தாமணியுரையில் ‘யோசனையென்பது நாற்காத எல்லை'1 என்பர் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்.
சான்றோராற் கூறப்படுஞ் சொல் எனப்படுதலின், ஞான ஒழுக்கங்களிற் சிறந்த அத்தகையோர்க்கு ஒன்று உதவுதலே சிறந்த ஈகையாகும் என்பது பெறப்படும்.