207 பேராசை கூலி குறைத்தல் பெரும் களவே – களவு 2
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
கண்டெ டுத்தவோர் பொருளனு பவித்தலுங் களவின்
பண்டம் வாங்கலும் வாங்கிய கடன்கொடாப் பழியும்
மண்டும் வண்பொரு ளாசையாற் பொய்வழக் கிடலுந்
தொண்டு செய்பவர் கூலியைக் குறைக்கின்ற தொழிலும். 2
- களவு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”வழியில் கண்டெடுத்த பிறர் பொருளைத் தனதென அனுபவிப்பது,
களவு செய்யப்பட்ட நுகர்பொருளை வாங்குவது,
பெற்ற கடனைத் திரும்பத் தராத பழிச்சொல்லும்,
பிறர் பொருள் மீது பெருகும் பேராசையால் இல்லாத வழக்குத் தொடர்வது,
கூலியைக் குறைத்துக் கொடுப்பது
ஆகிய செயல்கள் பெருமளவில் களவு செய்வதற்கு ஒப்பாகும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.