595 மேலோர் நடப்பதே ஏனோர்க்கும் விதியாம் - ஞானாசிரியன் பெருமை 1

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 3 மா அரையடிக்கு)

மகவின்க ரம்பற்றி முன்றான டந்து
..வளமேவு நடைகாட்டி மகிழன்னை போலுந்
தகமுன்பு தாமாடி நடனம்ப யிற்றுந்
..தகையோர்கள் போலுஞ்ச கத்தோர்செ விக்கட்
புகவேநல் வழியோது புரையற்ற புனிதர்
..பொறைசீல மன்பீகை புகழ்வாய்மை விரதம்
பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கு மவரோர்
..பதியாகி விதியாகி மதியோது வாரால். 1

- ஞானாசிரியன் பெருமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

பிள்ளையை நடைபயிற்றுந் தாய், அப்பிள்ளையின் கையைப் பிடித்து நடக்கச்செய்து தானும் உடன்நடந்து மகிழ்வள். கூத்துப் பயிற்றும் கூத்தர், ஆடுவாரை ஆடச்செய்து தாமும் உடன் ஆடிக்காட்டுவர்.

அவைபோல், மெய்யுணர்வு கைவரப்பெற்ற குற்றமில் மேலோர், பேரன்பு வாய்ந்த மாணவராம் அடியவர் குழாங்களுக்குச் செவியறிவுறூஉவாம் (உபதேசம்) உறுதிமொழி மொழிந்து, தாம் பொறை, சீலம், அன்பு, ஈகை, வாய்மை, நோன்பு முதலிய நற்பண்புகள் யாவற்றுக்கும் ஓர் `உறைவிடமாய் அவற்றிற்கு அன்னார் நடைமுறையே மாறா ஊழாய் அறிவு கொளுத்துவர்.

மகவு-பிள்ளை. கரம்-கை. புரையற்ற-குற்றமற்ற. புனிதர்-மேலோர். பதி-உறைவிடம். விதி-ஊழ். மதி-அறிவு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் . (9-May-20, 3:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே