36 எங்குந் தங்கி இயற்றுவோன் கடவுள் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 20

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

இரவினும் மற்றோர் பாரா
..இடையினும் பாவஞ் செய்வாய்
கரதலா மலகம் போல்முக்
..காலமும் உணர்வோன் எங்குந்
தரமொடு வீற்றி ருக்குந்
..தன்மையெள் ளளவும் ஓராய்
பரனிலா இடமொன் றுண்டேல்
..பவமவண் செய்நீ நெஞ்சே. 20

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சமே! இரவிலும், பிறர் பார்க்காத இடத்திலும் பாவங்கள் செய்கின்றாய்.

உள்ளங்கை நெல்லிக்கனி போல் முக்காலமும் உணர்கின்ற ஆண்டவன் எங்கும் உன்னதமாக அமர்ந்திருப்பதை சிறிதளவும் நீ எண்ணிப் பார்க்க மாட்டாய்.

இறைவன் இல்லாத இடம் என்று ஒன்றிருந்தால் பாவங்களை நீ அங்கே செய்” என்று இப்பாடலாசிரியர் எச்சரிக்கிறார்.

கரதலாமலகம் - கரதல ஆமலகம்: அங்கை நெல்லி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-May-20, 3:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே