ரிவர் வியூ ரோடு
என்னுடைய ரெண்டு விட்ட தம்பி நடராஜனை ( இங்கிலீஷா இருந்தா கசின்னு ஒரே வர்த்தையிலேயே முடிச்சி இருக்கலாம். ஆனா அது சொந்தங்களை தமிழ்லே சொல்ற மாதிரி அவ்வளவு துல்லியமாக சொல்லாது) அவன் சித்தப்பா இருக்கும் ஊரான கடலூரில் கொண்டு போய் சேர்க்கும் வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் நான் காலேஜுலே இருந்து லீவில் எங்கள் ஊருக்கு வந்தால் இந்த மாதிரி வேலைகள் எனக்காக காத்திருக்கும் .ஏனென்றால் நான் சாது. ( அப்படித்தான் நான் நினைக்கிறேன்) பெரியவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்பேன் என்பதால் அசடு என்று கூட வைத்துக்கொள்ளலாம். அந்த ஊரில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மணமான பெண்களை அவர்களின் கணவர்கள் வீட்டிற்கு அழைத்துச்சொல்வது, சிறுவர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அழைத்துப்போய் பத்திரமாக சேர்ப்பது போன்ற வேலைகளை செய்ய நான் தகுந்தவன் என்று எந்தக்காரணத்தாலோ எங்கள் வீட்டுப்பெரியவர்கள் கண்டு கொண்டார்கள். ஆகவே நான் லீவில் வருகிறேன் என்றாலே இத்தகைய வேலைகள் எனக்காக ரெடியாக இருக்கும். அந்த மாதிரி இப்போது பன்னிரெண்டே வயதான நடராஜனை அவன் சித்தப்பா வீட்டில் சேர்க்கும் வேலை என்தலையில் விழுந்தது.
அதற்குமுன் அவனுடைய தாத்தா, அதாவது என் சின்னத்தாத்தா, என்னைக்கூப்பிட்டு நான் செய்ய வேண்டிய வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்று பாடம் எடுத்தார். அவர் கொஞ்சம் படபடப்புப் பேர்வழி. என்னிடம் எங்க ஊர் பஸ் ஸ்டாண்டுக்கு மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ எப்படிப் போகவேண்டும், வண்டியில் ஏறும்பொழுது எந்தக்காலை எப்படி வைத்து வண்டியில் ஏறவேண்டும், வண்டிக்குள் முன்பாரம், பின்பாரம் பார்த்து எப்படி உட்காரவேண்டும், குதிரையோ, மாடோ அதன் வாலின் பின்பக்கத்திலிருந்து எவ்வளவு தூரம் பின்தள்ளி உட்கார வேண்டும், உட்காரும்போது வண்டு ஓட்டுபவருக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் எப்படி அமர வேண்டும், அவர் சாட்டையை சொடுக்கும்போது நான் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், பையனை எப்படி நான் வண்டியில் உட்கார்ந்து இருக்கும்போது அவன் வழுக்கி விழாமல் பிடித்துக்கொள்ளவேண்டும், பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன் வண்டியிலிருந்து உருண்டு விழாமல் எப்படிப் பையனை பத்திரமாகப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கவேண்டும் என்பதை விலாவாரியாகச் சொல்லிக்கொடுத்து அவ்வப்போது, நான் என்ன சொன்னேன்னு புரிஞ்சுதா என்று கேள்வி வேறு கேட்டு, நான் பதில் சொன்னவுடன் அதில் எவ்வளவு % கரெக்ட், எவ்வளவு % தப்பு என்று என்னைத் திருத்தி ஒரு வழி பண்ணி விடுவார். நான் பல தடவை பல பேரை அழைத்துக்கொண்டு போயிருக்கிறேன். வேறு யாரும் என்னை இந்த அளவு படுத்தியது இல்லை.
ஒரு வழியாக அவருடைய உபதேச சிந்தாமணியைக்கேட்டு ஒரு வண்டி பிடித்து அழைத்து வந்து அவர் வீட்டு வாசலில் வெற்றிகரமாக நடராஜனுடன் நான் அமர்ந்தேன். வண்டி புறப்படும் வரையில் “அது சரியில்லை, இது சரியில்லை” என்று எங்களை கரெக்ட் செய்து, வண்டிக்காரருக்கும் வண்டியை எப்படி எங்களுக்கு சேதமில்லாமல் ஓட்ட வேண்டும் என்று ஒரு பாடம் எடுத்து, வண்டி கடைசியாக ஒரு வழியாக புறப்பட்டது.
அவர் இவ்வளவு பாடங்கள் எடுத்ததற்கு காரணமில்லாமல் இல்லை. அதற்கு சில வருடங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தினர் பலரும் மதுரையில் நடந்த(என் வருங்கால மனைவியின்) அக்கா கல்யாணத்திற்குப் போயிருந்தோம். அப்போது இந்த நடராஜன் திடீரென்று காணவில்லை. எங்கே போனான் அவன் என்று அவனுடைய “பெர்சனல் கார்டு” நான்தான் என்பது போல் என் சின்ன தாத்தா என்னைக்கேட்டார்.
“என்னைக்கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்?” என்று என்னையும் மீறி ஏதோ ஒரு மூடில் சொல்லவே அவருக்குப்பயங்கர கோபம் வந்துவிட்டது. மீசை இருந்திருந்தால் துடி துடித்திருக்கும். மீசை இல்லாது போகவே அவர் வாய் துடி துடித்து பட படவென்று பொரிந்து தள்ளினார். “ஒரு பொறுப்பு கிடையாது. கூட வந்தவன் காணாமல் போற வரையிலும் தூங்கிட்டு இருந்தீங்களா?” என்று என்னை மாத்திரமல்ல என்னோடு கூட இருந்த எங்க ஊர்ப் பையங்க அஞ்சு பேரையும் வார்த்தைகளால் விளாசு விளாசு என்று விளாசி விட்டார். அவருக்கு அருகில் இருந்த மற்றப் பெரியவர்களும் அவரோடு கூட்டு சேர்ந்து கொண்டு எங்களை பாடாய்ப்படுத்திவிட்டார்கள். உடனே எங்கள் அத்தனை பேரையும் பார்த்து
“ எப்படியாவது இன்னும் அரை மணி நேரத்திலே நடராஜனை இங்கு கொண்டு வந்து சேர்க்காவிட்டால் நடப்பதே வேறே” என்று பயமுறுத்தினார்கள்.
என்ன நடக்கும் என்று கேட்கவேண்டும்போல் இருந்தாலும் அந்த நேரத்தில் அப்படிக்கேட்பது எங்கள் கன்னத்துக்கும் முதுகுக்கும் அவ்வளவு நல்லது இல்லை என்று தீர்மானித்து வாயை மூடிக் கொண்டோம்.
உடனே சீதையைத்தேடி குரங்குகள் படை பல்வேறு திக்குகளிலும் சென்றது போல ஆளுக்கொரு திசையாக நாங்கள் பறந்தோம். நாங்கள் அத்தனை பேரும் மதுரைக்குப் “புச்சு”. இந்தத்தேடுகையில் எங்களில் சிலர் காணாமற் போவற்கான சான்ஸ் ரொம்பவுமே ஜாஸ்தி. இருந்தாலும் எங்களைச்சுற்றி இருந்த பெரியவர்கள் வாயிலிருந்து தப்பினால் போதும் என்று நாங்கள் புறப்பட்டோம். அவனை எங்கே தேடி எப்படிக் கண்டுபிடிப்பது? . அன்றைய மதுரை எங்களைப் பொறுத்தவரையிலும் 5 அல்லது 6 சினிமாக் கொட்டகை கொண்ட பெரிய ஊர். எங்கள் ஊரில்ஒரேஒரு டெண்ட் கொட்டாய்தான். ஆக ஊர் ஒரு பெரிய ஊர் என்பதற்கு ஒரே அடையாளம் எங்களைப் பொறுத்த வரையில் அதுதான்.
அப்படிப்பட்ட பெரிய ஊரில் ஒரு அரை மணிக்கு மேலேயே தேடினோம். அவர்கள் கொடுத்த கால கெடு முடிந்து விட்டது. நடராஜன் நஹீம். கிடைக்கவே இல்லை. வேறு என்ன செய்ய முடியும் என்று எங்கள் தலைவிதியை நொந்தபடி நடப்பது நடக்கட்டும் என்று பல திசைகளிலும்போன நாங்கள் திரும்பி வந்தோம். “ எங்கேடா நடராஜன்?” என்று அவர்கள் கேட்டபோது “தில்லையில் இருக்கிறான்” என்று எங்களால் சொல்லித் தப்பிக்க முடியுமா? எனவே மென்று முழுங்கி எங்கேயும் அவனைக்காணோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து எங்கள் முதுகை தயார் செய்து வைத்துக்கொண்டபோது அந்த மதுரை சுந்தரேசுவரருக்கே பொறுக்காமல் எங்கள் பாலகன் நடராஜனை ஒரு மாட்டு வண்டியில் வந்து இறங்கவைத்து எங்களைக் காப்பாற்றினார். அப்புறம் நாங்கள் நடராஜனை அந்தப்பக்கம் இந்தப்பக்கம போகாமல் கோழி முட்டையை அடைகாப்பது போல் பாதுகாத்தோம். இதுதான் என் சின்னத்தாத்தா எனக்கு அந்த அளவுக்கு அறிவுரை வழங்கக்காரணம்.
( நடராஜன் காணாமற்போனதற்கான முழுப்பொறுப்பையும் அனியாயமாக என்மீது போட்டதை நான் வேறு வழி இன்றி மறுத்துச்சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் அத்தனை பேரும் பெரியவர்கள். ஆனால் அந்தக் குஞ்சுக்கூட்டத்தில் நான்தான் மூத்தவன்)
சரி. இப்போதைய கதைக்கு வருவோம். எங்கள் வண்டி செட்டிக்குளம் பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தது. நானும் நடராஜனும் எந்தப்பிரச்சினையுமில்லாமல் பஸ் டிக்கட் வாங்கி பஸ்ஸில் எங்கள் சீட்டில் அமர்ந்தோம். வண்டி புறப்பட்டது. எங்கள் ஊரான அரியலூரிலிருந்து கடலூர் சுமார் 40 மைல்கள். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர பயணம். கடலூரை வந்து அடைந்த போது இரவு நேரம் 7:45. என் அடுத்த ப்ராஜக்ட் தொடங்கியது.
இப்போது நடராஜனுடைய சித்தப்பா ஜானகிராமனுடைய இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது. வண்டியில் எப்படி ஏறுவது, வண்டியிலிருந்து எப்படி இறங்குவது என்றெல்லாம் விவரமாகச் சொன்னவர் திரு ஜானகிராமன் விலாசத்தைச்சொல்லும்போது ஜானகி ராமன், போஸ்ட்மாஸ்டர், ரிவர் வ்யூ ரோடு ( River view road) என்று சொன்னாரே ஒழிய வீட்டு நம்பர், வேறு விவரங்கள் தரவில்லை. இந்த ரோடு கடலூர் நியூ டவுனில் இருப்பதாகச்சொன்னார். மேலும் கேட்டதற்கு அவர் அங்கே ஜானகிராமன் என்ற பெயரைச்சொல்லி போஸ்ட் மாஸ்டர் என்றாலே குழந்தை கூட சொல்லிவிடும் என்றாரே ஒழிய எந்த பெஞ்ச் மார்க்குக்கு அருகில் இருக்கிறது என்றும் சொல்லவில்லை. மேலும் ஏதாவது நான் கேட்டால் திரு ஜானகிராமனின் புகழை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று அவர் நினைத்துக் கொள்வார். எனவே அவரிடம் மேற்கொண்டு எதையும் கேட்கவில்லை.
என்னிடம் இருக்கும க்ளூவை வைத்து எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்து
“ஜானகிராமன், போஸ்ட்மாஸ்டரைத். தெரியுமா?” என்று நான் கேட்ட அத்தனை பேரும் தங்களுக்குத் தெரியாது என்றனர்.. ஒரு சிலர் கடிலம் நதிக்கு அந்தப்பக்கம் இருக்கலாம் தேடிப்பாருங்கள் என்றனர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இது நியூ டவுன்தானே என்று கேட்டதற்கு இல்லை. நீங்கள் கடிலம் நதிக்கு அந்தப்பக்கம்தான் நியூ டவுன். அங்கே போய்த் தேடுங்கள் என்றனர். லோ லோ வென்று நடராஜனைத் தர தர வென்று இழுத்துக்கொண்டு அந்த இருட்டில் நியூ டவுன் வந்து அடைந்தேன். நல்ல வேளையாக அவன் பெயருக்கேற்ப நட ராஜனாக இருந்ததால் என்னோடு முணுமுணுக்காமல் நடந்து வந்து கொண்டு இருந்தான்.
அப்பாடா. ஒரு விதமாக நியூ டவுனுக்கு வந்து சேர்ந்தாயிற்று. இனி எல்லாம் ஈசி தான் என்று நினைத்து ஜானகிராமன் பெயரைச்சொன்னால் யாருக்கும் தெரியவில்லை. ஜானகிராமன் பெயரைச்சொன்னால் ஒரு குழந்தை கூட சொல்லிவிடுமே என்று தாத்தா சொன்னதை யோசித்து, ஒரு வேளை ஏதாவது ஒரு குழந்தையைக்கேட்போம் என்றால் அந்த நேரத்தில் அங்கே எந்தக் குழந்தையும் கண்களில் தென்படவில்லை.
எனவே தெருவின் பெயரைச்சொல்லிக்கேட்போம் என்று அந்த நேரத்தில் அங்கு நடந்து செல்பவர்களை நிறுத்தி “ரிவர் வ்யூ ரோடு” எங்கே என்று கேட்டதற்கு அப்படி ஒரு ரோடே கிடையாது என்று அடித்துச்சொன்னார்கள்.
“நான் இந்த ஊரிலேயே பிறந்து வளந்தவன். 35 வருடங்களாக இங்கேதான் இருக்கிறேன். அப்படி ஒரு பெயர் கொண்ட ரோடை நான் கேள்விப்பட்டதே இல்லை” என்று அழுத்தம், திருத்தமாகச்சொன்னார் ஒருவர்.. அதில் இன்னொருவர் அந்தப் பக்கம் பழைய டவுன்லே போய்க்கேட்டுப்பாருங்களேன் என்றார். நான் அங்கு விசாரித்த பிறகுதான் இங்கே வந்திருப்பதாகவும், அந்த ரோடு புதிய டவுனில் இருப்பதாகவும்தான் எங்களிடம் சொல்லி அனுப்பினார்கள் எனவும் சொன்னதற்கு ஒருவர் “ஒண்ணு பண்ணு தம்பி- என்னைப் பாத்துத்தான்- போஸ்ட்ஆபீசிலே விசாரிச்சா அந்த ரோடு எங்கிட்டு இருக்குன்னு சொல்லுவாங்க” என்றார். நான் அந்த போஸ்ட் மாஸ்டரைத் தேடித்தான் வந்தேன் என்று சொன்னேன்..
“போஸ்ட் ஆபிசுலே கேட்டா சொல்லுவாங்கன்னு சொல்றது சரிதான். ஆனா அந்த போஸ்ட் ஆபீஸ் எங்கே இருக்குன்னு நான் இந்த இருட்டிலே எப்படிக்கண்டு பிடிக்கிறது?” என்றேன். அதற்கு அந்த ஆள் அதோ அந்தக்கடைசியா வலது பக்கமா இந்த வீதியிலே ஒரு கட்டிடம் தெரியுதே, அதான் போஸ்ட் ஆபீஸ் என்றார்.
“ரொம்பவம் தேங்ஸ்” என்று சொல்லிவிட்டு அந்தக்கட்டிடம் நோக்கிப் புறப்பட்டோம். ஊரே உறங்க ஆரம்பித்து விட்டது . மணி எவ்வளவு என்று தெரியவில்லை. என்கையிலும், நடராஜன் கையிலும் ரிஸ்ட் வாட்ச் இல்லை. பெரும்பாலான இளைஞர்கள் ரிஸ்ட் வாட்ச் கட்டிக்கொள்ளாத காலம் அது. நான் உத்தேசமாக மணி 10 இருக்கும் என்று ஒரு குருட்டுக்கணக்குப் போட்டேன்.
சற்று நேரத்தில் போஸ்ட் ஆபீஸ் கட்டிடமும் வந்தது. வாசலில் ஒரு ஆள் இழுத்துப்போர்த்திக்கொண்டு குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு இருப்பது தெரிந்தது. “ஐயா, ஐயா” என்று அவரை எழுப்பினேன். அப்பொழுது அரைகுறைத் தூக்கத்துடன் இருந்த அந்த ஆள் வேண்டா வெறுப்பாக கடு கடுத்த முகத்துடன் “ ஏன் என்னை எழுப்பினீங்க? இப்ப உங்களுக்கு இன்னா வேணும்? என்று கேட்டார்.
” போஸ்ட் மாஸ்டர் ஜானகிராமன்…. என்று நான் சொல்லி முடிப்பதற்குள்ளே, அந்த ஆள் தூக்கம் கலைந்து முகத்திலிருந்த கடுகடுப்பு மாறி ஒரு மரியாதையுடன் எழுந்து
“ நீங்க யாரு? “ ன்னு கேட்டார்.
“நாங்க அவரோட சொந்தக்காரங்க. அவர் வீட்டுக்குப்போகணும்” என்று சொன்ன மாத்திரம் அந்த ஆள் விரைவாக எழுந்து வந்து
“அதோ அங்கே தெரியுதே அந்த வீடுதான்” என்று சொல்லி, அந்த வீடு வரையிலும் கூட வந்தார். அவர் ஜானகிராமனின் கீழ் பணி புரியும் கிளாஸ் 4 செர்வன்டாக இருப்பாரோ என்னவோ. அப்போது நான் அவரிடம் கேட்டேன்,
“ரிவர்வ்யூ ரோடு இங்கே எங்கே இருக்கு? அங்கேதான் அவர் வீடு இருக்குன்னு சொன்னாங்க ? என்றேன் .
“அப்படி ஒரு ரோடே இங்கே கிடையாதுங்க” என்றார்.
“பின்னே இந்த ரோடு பேர் என்ன?” என்று கேட்டேன்.
“இதுவா, இது ஆத்தங்கரை ரோடு” என்றார்.
“அடக்கண்ணறாவியே ஆத்தங்கரை ரோட்டை இங்கிலீஷ் படுத்தி அதுக்கு ஒரு தனி ஸ்டேடஸ் கொடுத்து எங்களை இந்தப்பாடு படுத்திவிட்டாரே தாத்தா”என்று நினைத்தபடி கூட வந்தவர்க்கு ஒரு தேங்ஸ் சொல்லிவிட்டு, வீட்டின் கதவைத் தட்டினேன்.
இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால் நான் எந்த வழிப்போக்கரிடம் போஸ்ட் ஆபீஸ் எங்கே என்று விசாரித்தேனோ அந்த இடம் திரு ஜானகிராமனுடைய வீட்டு வாசல். மறுபடியும் அந்த இடத்திற்கே வந்து இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டேன்.
ஜானகிராமன் வந்து கதவைத் திறந்தார். எங்கள் இருவழையும் பார்த்து
“வாங்க, வாங்க” என்று சொல்ல, அவர் மனைவி
“என்ன இந்த நேரத்துலே பஸ்ஸே கிடையாதே, எப்படி வந்தீங்க?” என்று கேட்க
நான் விஸ்தாரமாக நடந்ததை எல்லாம் சொல்ல
“அடப்பாவமே, ஆத்தங்கரை ரோடுன்னு சொன்னா ஒரு குழந்தை கூட அரை நிமிஷத்துலே சொல்லியிருக்குமே. இங்கிலீஷ் பேரைச்சொன்னதாலே உங்களுக்கு இத்தனை அலைச்சலாப் போச்சே” என்றார்.
நான் நினைத்துக்கொண்டேன் மனதிற்குள் ஒரு பெருமைக்காக ‘தமிழ்ப் பேரை’ இங்கிலீஷ் படுத்தி எங்களைப் படாத பாடு படுத்தியதை நினைத்துக்கொண்டேன். இப்படித்தான் சில பழக்கமான பெயர்களை தேவை இல்லாமல் இங்கிலீஷ் படுத்தி அந்த இடத்துக்கு நாம் பெருமை சேர்க்கிறோமோ இல்லையோ, நம்மை குழப்பிக்கொள்கிறோம்.