அன்புள்ள அப்பா
அன்புள்ள அப்பா! நீ குடி மறந்திருந்த நாளில்
வானத்தின் மடி கிடக்கும்
வானவில்லென
பல வண்ணங்கள்
சித்தரித்தனவே
என் எண்ணங்களை!
உணர்வின்றி உன்நாவும்
பிரசவித்த வார்த்தைகள்
என் மட்கிப்போன மனதிற்குள்
எழுப்பியதே . . .
அஸ்திவாரமற்ற
ஓர் கனவுக் கோட்டையை!
நீ கசிந்த பாசத்தால்
தூர்வாரி பொங்கி வழியும்
குளமாய்
பட்டினி தோண்டிப்
பள்ளமான என் வயிறு!
அஞ்சறைப் பெட்டியதில்
அம்மா சேர்த்த சிறு காசும்
களவாடல் இனி போகாதென
கற்பனையாய் ஓர் மகிழ்வு!
குடும்பத்தின் இழுவைப் பொறி
சரக்கு ஏற்றி . . .
தடம் புரண்டு
கேட்பாரற்று கிடக்குதம்மா
மீண்டும்
மல்லாந்து சாலையிலே!
புழுதியில் புரண்டெழுந்து
வீடிருக்கும் வீதி மறந்து
மானத்தை மூட்டை கட்டி
மாற்றான் கதவு தட்டி
சுமை தாங்கிக் கல் இங்கே
படிக் கல்லாகிப் போனதம்மா! இறுதி ஊர்வலத்தில் மிதிபட்ட மலர் போல காய்ந்து
கசங்குதம்மா சருகான என் மனது!
குடியைத் தொட மாட்டேன் என நீ செய்த சத்தியமோ என் உள்ளங்கை எரிக்கும் முன்
எரித்து விட்டதே என் உள்ளத்தை!