270 தீயோர் தூயோரைத் தம்போல் தேறுவர் - பெரியோரைத் தூறல் 4
தரவு கொச்சகக் கலிப்பா
வாய்கைக்கு நோயினர்க்கே மாமதுவுங் கைப்பாகுங்
காய்வெயுலு மஞ்சணிறங் காமாலைக் கண்ணருக்கே
சாய்நிழலுஞ் சுடுவெயிலாந் தாபச்சு ரத்தினர்க்கே
தீயவர்க்குத் தூயவருந் தீயவர்போற் றோன்றுவரே. 4
- பெரியோரைத் தூறல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”வாய் கசக்கும் பித்தநோய் உடையவர்க்கு கொம்புத்தேனும் கசக்கும்.
காமாலைக் கண்நோய் உடையவர்க்கு நடுப்பகல் வெயிலும் மஞ்சள் நிறமாகத் தெரியும்.
காமச்சுர நோயுடையவர்க்கு மாலை வெயிலும் உச்சி வெயில் போல மிகச் சூடாக இருக்குமாம்.
அதுபோல, தீயவர்களுக்கு நல்லவர்களும் தீயவர்கள் போன்றே காணப் படுவார்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
.
மாமது - கொம்புத்தேன். கைப்பு – கசப்பு,
தாபம் - காமம். தூயவர் - நல்லவர்.