அன்பு என் எண்ணங்களின் வெளிப்பாடு

"நாம் சாதரணமானவர்களாக இருக்கும் போது மிக அசாதாரணமான செயல்களை செய்பவர்களாக உணர்ப்படுகிறோம்; நாம் அசாதாரணமானவர்களாக மாற முயற்சித்து செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை மிகச் சாதாரணமானவர்களாக மாற்றுகிறது.. இது ஓஷோவின் வரிகள், நான் என்னுடைய விருப்பத்திற்கு கொஞ்சம் திரித்து கூறியிருக்கிறேன். நான் ஓஷோவால் சிறிதளவு ஈர்க்கப்பட்டவள். பெரிதாக அவருடைய புத்தகங்களையோ, பேச்சுகளையோ நான் கேட்டதில்லை. இருப்பினும் என் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளோடு பெரிதும் ஒன்றிச்செல்வது அவருடைய வார்த்தைகளும், அறிவுரைகளுமே. நான் வீட்டில் ஏதோ ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போது, என் மனம் வேலையின்றிச் சோம்பேறியாக இருக்கப் பிடிக்காமல் ஏதோ ஒன்றை சிந்திக்கத் தொடங்கியது. சிந்தனை என்பதே பல்லாயிரக்கணக்கான அணு மிரள்ச்சிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்படர்வது போல வெகு தூரம் பயணிக்க கூடியதுதானே. ஏதோ ஒரு பிணைப்பை தொட்டபோது அன்பு என்ற வார்த்தையை பற்றி பெரிதே யோசிக்க தொடங்கியது. மழை நேரத்தில் சீரான மழைத்துளிகள் சமநிலையான மனநிலையோடு ரசித்துக்கொண்டிருக்க. அந்த சமநிலையை உடைப்பதைப் போன்ற வேகத்தில் மின்னல் வந்து கருவிழிய நேரடியாக தொட்டுச்செல்லும். அதேபோல் அன்பை பற்றிய சில எண்ணங்கள் மின்னல்களாய்த் தோன்றின. முன்பெல்லாம் அன்பு என்பது
* தெருக்களில் விளையாடும் பாண்டி ஆட்டத்தில்
*ஒரு மாங்காயை கல்லால் உடைத்து பலபேர் பங்குபோட்டு சாப்பிடுவதில்
* அம்மா இன்னிக்கு நான் அத்தை வீட்ல போய் சாப்பிட்டு வரேன், மாமா கோழி குழம்புன்னு சொல்லிட்டு போயிருக்கு
*அண்ணி நீங்க செஞ்ச அதிரசம் மட்டும் எப்படி இம்புட்டு ருசியா இருக்கு
*நீங்க எப்படி சொல்றிங்களோ அப்டியே செஞ்சிடுவோம் சித்தப்பா
*கூட்டாளிங்க எல்லாரும் சாப்பாடு கொண்டு வந்து 3 வேளையும் ஓரு இடத்துல கூடி சாப்டுறதுல
* கல் சொக்கி விளையாடும் விளையாட்டுல எல்லாரோட அம்மாக்களும் விளையாட, ஜெயிச்ச உடனே என் அம்மா ஜெயிச்சிருச்சுன்னு சொல்றதுக்கு முன்னாடி, என் சித்தி, என் அத்தை, என் அக்கா ஜெயிச்சிடானு வர சத்தம் தான் பெருசா இருக்கும்
இதெல்லாம் தான் அன்பா தெரிஞ்சது.. முன்னாடி அன்பு ஊட்டப்பட்டது, புகட்டப்பட்டது,இயல்பாக மனதோடு கலக்கப்பட்டது. அதனாலயோ என்னவோ அன்பா இருக்கிறதும் மத்தவங்களை தட்டி கொடுகிறதும் சாதாரணமான விஷயமா இருந்துச்சு. எல்லா இடத்துலயும் இருக்கிற காத்த போல இருந்துச்சு. அந்த சாதாரணம் தான் வாழ்க்கையை அசாதரணமா நகர்த்தி கொண்டுபோற சக்தியா இருந்துச்சு. ஆனா இப்போ ரொம்ப நாளா தேன் மாதிரி இனிச்சிட்டு இருந்த கிணத்து தண்ணி கொஞ்ச கொஞ்சமா உப்பா போன மாதிரி நம்ம மனசுல சாதாரணமா இருந்த அன்பு கொஞ்ச கொஞ்சமா மாறிப்போச்சு. வெறுப்பு, எரிச்சல், கோவம், பொறுமை இல்லாமை, மத்தவங்களை பாராட்ட முடியாம களைச்சு போய் கிடக்கு. இப்ப ஒருத்தர் எல்லார் மேலயும் அன்பா இருந்தாலும் சரி, இருக்குற மாதிரி நடிச்சாலும் சரி அவங்கள ஏதோ ஒலிம்பிக்ல தங்கம் வாங்கின மாதிரி பாக்க வேண்டியதா இருக்கு. அப்படி ஒரு பார்வையை வாங்குறதுக்கு அவங்க ரொம்ப மெனக்கெட வேண்டியதா இருக்கு. நிறைய பயிற்சி எடுக்க வேண்டியதா இருக்கு. ரொம்ப அசாதாரணமான வேலைய செய்ய வேண்டியதா இருக்கு. நிறைய விஷயங்களை மண்டைக்குள்ள போட்டு நிரப்ப வேண்டியதா இருக்கு. இப்படி அசாதரணமா இருக்க முயற்சிக்கும் போது தான் ரொம்ப சாதாரணமான அன்பு அவங்கள வந்து சேருது. அன்பை சாதாரணமா இருக்குற உங்க சாதாரணமான கண்களால, உங்க சாதாரணமான மனசால ரொம்ப சாதாரணமா பாருங்க. அதோட நுணுக்கமான, ஆழமான, உண்மையான அழகு தெரியும்.
அன்பை
சாதாரணமாக உணரு..!!
மிகச் சாதாரணமாக பகிரு..!!

எழுதியவர் : கீர்த்தி (31-May-20, 8:57 pm)
சேர்த்தது : Keerthana Velayutham
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே