அம்பலத்தே போம்

திருவாரூர்த் தியாகேசப் பெருமானைத் தரிசித்த காளமேகம் இவ்வாறு பாடிப் பெருமானைப் போற்றுகின்றார்.

கட்டளைக் கலித்துறை

பாரூ ரறியப் பலிக்குழன் றீர்பற்றிப் பார்க்குமிடத்
தோரூரு மில்லை யிருக்கவென் றாலுமுள் ளூருமொற்றி
பேரூ ரறியத் தியாகரென் றேபெரும் பேரு(ம்)பெற்றீர்
ஆரூரி லேயிருப் பீரினிப் போய்விடும் அம்பலத்தே. 118

- கவி காளமேகம்

பொருளுரை:

உலகத்திலுள்ள ஊரவர் எல்லோருமே அறியும்படியாகப் பிச்சைக்கு அலைந்தீர், உம்மை நெருங்கி உம் நிலையை ஆராய்ந்து பார்க்குமிடத்தே, உமக்கென ஒர் ஊரும் இருப்பதாகத் தோன்றவில்லை. அது தானில்லை; நீர் இருக்க வென்றாலும் இந்தவூர் ஆகுமோ என நினைத்தால், உள்ள இதுவும் ஒற்றியாக இருக்கிறது.

பேரூர்கள் எல்லாம் அறியும்படியாகப் பெரியதொரு தியாகவான் என்று புகழும் பெற்று விட்டீர்! இனி எவருக்குரிய ஊரிலேதான் நீர் தங்கி யீருப்பீரோ? எதுவும் உமக்கென இல்லாததாலே, அம்பலத்திற்குச் சென்று விடுவீராக! அதுவே உமக்குப் பொருந்தும்!

திருவொற்றியூர், திருவாரூர் என்றது ஊர்ப் பெயர்களை, ஒற்றி - ஒற்றிவைத்தல் எனவும், எவர் ஊரில் இருப்பீர் எனவும் நயமாக அமைத்தனர். இருக்கும் ஊர் ஒற்றியூர், திருவாரூரிலும் இருப்பவர் நீரே, இனி அம்பலத்தே போய் நடனமாடுபவரும் நீரே! என்று போற்றுகின்றார் கவி காளமேகம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-20, 7:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே