குமரேச சதகம் - வலியோரையும் ஊழ்விடாது – பாடல் 44
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அன்றுமுடி சூடுவ திருக்கரகு ராமன்முன்
அருங்கா டடைந்ததென்ன
அண்டரெல்லாம் அமிர்தம் உண்டிடப் பரமனுக்
காலம் லபித்ததென்ன
வென்றிவரு தேவர்சிறை மீட்டநீ களவில்வே
டிச்சியை சேர்ந்ததென்ன
மேதினி படைக்கும் அயனுக்கொரு சிரம்போகி
வெஞ்சிறையில் உற்றதென்ன
என்றும்ஒரு பொய்சொலா மன்னவன் விலைபோன
தென்னகாண் வல்லமையினால்
எண்ணத்தி னால்ஒன்றும் வாராது பரமசிவன்
எத்தனப் படிமுடியுமாம்
மன்று தனில் நடனமிடு கங்கா தரன்பெற்ற
வரபுத்ர வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 44
- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
பொது அரங்கிலே கூத்தாடும் சிவபிரான் அருளிய சிறந்த மகனே! வடிவேலனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!
முற்காலத்தில் அன்றைக்கு முடி சூடுவதாக முடிவுசெய்தும் (அதுமாறி) இராமன் காட்டிலே வாழநேர்ந்தது ஏன்? வானவரெல்லோரும் அமுதம் உண்ணவும், சிவபிரானுக்கு மட்டும் நஞ்சு கிடைத்தது ஏன்?
வெற்றியையுடைய வானவரைச் சிறையிலிருந்து வெளிவிடுத்த நீ களவிலே வேடுவர் மகளைக் கலந்தது ஏன்? உலகைப் படைக்கும் பிரமனுக்கு ஒருதலை பறிமுதலாகி, அவன் கொடுஞ்சிறையிலும் இருக்க நேர்ந்தது என்ன,
எப்போதும் பொய் சொல்லாத அரிச்சந்திரன் விலைப்பட்டது ஏன்? ஒருவருடைய வலிமையினாலும் சூழ்ச்சியினாலும் எதுவும் நடவாது; பரமசிவன் திட்டமிட்டவாறே நடைபெறும்.
விளக்கவுரை:
ஊழின் பெருவலிமையைக் கூறவந்தவர் பரமசிவன் எத்தனப்படியே யாவும் முடியும் என்றார்.
மேலும் பரமசிவனுக்கே ஊழைக் கடக்கமுடியாது என்பதற்கு அவர் நஞ்சு உண்டது ஊழினால் என்கிறார்.
ஊழின் வலிமை நம்மால் தடுத்துக்கொள்ள முடியாதது. சிவபிரான் நஞ்சை உண்டதும் அத்தகைய நிலைதானா? முருகன் வள்ளியம்மையைக் களவில் மணந்ததும் ஊழ்வினையா? அது அவருடைய விளையாட்டென்று தான் புராணம் கூறும்.
மேதினி - உலகம், மன்று - அவை, கங்கையை முடியில் தரித்தவர் கங்காதரர்.
கருத்து:
ஊழ்வினையை வெல்வது அரிது.