நெருப்பை அணைத்தவள்

'புள்ளிருக்கும் வேளுர்’ எனப் புகழ்பெற்று விளங்குகிற வைத்தீசுரன் கோயிலுக்குச் சென்றிருந்தார் காளமேகம். அங்கே, பெருமானைத் தரிசிப்பவர், அம்மையின் பாகமாயமைந்த நிலையிலே நெஞ்சினைப் பறிகொடுத்தார். அப்போது பாடியது இது.

நேரிசை வெண்பா

தீத்தானுன் கண்ணிலே தீத்தானுன் கையிலே
தீத்தானு முன்றன் சிரிப்பிலே - தீத்தானுன்
மெய்யெலாம் புள்ளிருக்கும் வேளுரா உன்னையிந்தத்
தையலா ளெப்படிச்சேர்ந் தாள்? 121

- கவி காளமேகம்

பொருளுரை:

புள்ளிருக்கும் வேளுரிலே கோயில் கொண்டிருக்கின்ற பெருமானே! நின் நெற்றிக்கண்ணில் விளங்குவதும் நெருப்புத்தான், நின் திருக்கரத்திலே இருப்பதும் நெருப்புத்தான். நின் திரிபுரம் எரித்த சிரிப்பிலே எழுந்ததும் நெருப்புத்தான். நின் திருமேனி முழுவதுமே நெருப்பு மயமானது தான்.

இப்படி இருக்கவும், இந்தப் பெண்மணியான உமையம்மை நின்னை எப்படி விரும்பிவந்து அணைந்தாளோ? அதுதான் எனக்கும் வியப்பாயிருக்கிறது பெருமானே!

புள்ளிருக்கும் வேளுர் - சடாயு பூசித்த திருத்தலம். அம்மை தண்மையுடையவள். “அவள் எப்படி நெருப்பு மயமான உடலுடைய அப்பனுடன் சேர்ந்துள்ளாள்? இப்படிக் கற்பித்து வியக்கிறார் கவிஞர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-20, 7:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே