வட்டத்துக்குள் சதுரம்

வட்டத்துக்குள் சதுரம்

நானும் என்னுடன் வேலை செய்யும் சகோதரியும் ஒரு கிராமத்திற்குப் போய் இருந்தோம். அடுக்கடுக்காக நடுத்தர வீடுகளும், குடிசை வீடுகளுமே காட்சி அளிக்கும் ஒரு அழகிய கிராமம் தான் அது. அன்றும் அப்படித்தான் பேருந்தை விட்டு இறங்கி குறிப்பிட்ட இடத்திற்கு போவதற்காக நடந்துகொண்டு இருந்தோம், மிகவும் மனதை மயக்கக்கூடிய விதத்தில் தெருவின் இரு மருங்கும் பச்சைப்பசேல் என்று காட்சியளித்த காய்கறித் தோட்டங்கள், கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது. ரசித்துக்கொண்டே நடந்தோம், நாங்கள் சந்திக்க வந்த எங்கள் பள்ளித் தோழியின் வீட்டை நோக்கி நடந்தோம். வீடு தெருவில் இருந்து உள்ளே ரொம்ப ஒதுக்குப்புறமாக இருந்தது, கஷ்டப்பட்டு நடந்து அவள் வீட்டைக் கண்டுபிடித்தோம், அவளும் வந்தாள். வீட்டைச் சுற்றியும் பச்சைப்பசேல் என்ற காய்கறித் தோட்டம், அப்போது தான் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வந்திருந்தாள். செம்மண் வரம்பிலே தண்ணீர்ப் பட்டு செடிகளுக்குப் பாத்தி கட்டும் போது இடையிலுள்ள புற்கள் கசங்கிய மணமும் சேர்ந்து ஆஹா!... சொல்லமுடியாத இதமான சுகம் அது...தக்காளி, கத்தரி, புடலை, பாகல், சுரை, பூசணி, காராமணி, மரவள்ளி, வெண்டை, மிளகாய், வெங்காயம், கீரை என்று வகை வகையான காய்கறிச் செடிகளை பயிர் செய்து சந்தைக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அந்நேரம் எனக்கொரு பாடல் நினைவுக்கு வந்தது.. ஏ. மருதகாசி இயற்றிய கடவுள் என்னும் முதலாளி என்ற பாடல் அதில் இடையில் ஒரு வரி இப்படியாக வரும், “ என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில், ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”...எல்லாம் சரிதான் ஏழை விவசாயியின் வீடு வளம் பெறவில்லையே, என் தோழி குடும்பம் விவசாயம் தான் செய்கிறார்கள். எனக்கு அவளைப் பார்க்க வேதனையாக இருந்தது, அவள் வீட்டின் கூரையில் ஓலைகளை விட ஈர்க்குகள் தான் அதிகமாக தெரிந்தது. எதையும் கேட்டு அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை அமைதியாக இருந்துவிட்டேன். இரண்டு டம்ளரில் மோருடன் வந்தவள்,குடிக்கும்படி கையில் கொடுத்தாள். பிள்ளைகள், படிப்பு, கணவர் என்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். பின்பு, ஒரு செம்பு தண்ணீருடன் வந்தவள், கையை அலம்புங்க சாப்பிடலாம் என்றாள்.. இல்லை, இருக்கட்டும் என்றேன்...என்னடி!... அப்படி உனக்கு ஒரு வேளை, சாப்பாடு கூடவா என்னால போடமுடியாது என்றாள். நான் இன்னைக்கு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்க்காக காலையிலேயே சமைச்சுட்டேன்...மொசைக் கொட்டை போட்டு கருவாட்டுக்குழம்பும், புளிச்சக் கீரையும் சமைத்திருக்கிறேன் என்ற படி தட்டை எடுத்துப் பரிமாறினாள்...வசதி, வாய்ப்புகள் தான் குறைவு,மனசோ பெருசு..சாப்பிட்டபின் வீட்டைவிட்டு நடந்தோம். என் எண்ணம் எல்லாம் அவளைச் சுற்றியே வட்டமிட்டது,ரம்மியமான கிராமியச் சூழல், மெல்லியதாக காற்று வந்து முகத்தில் மோதுகிறது...களைந்த முடியை சரி செய்து கொண்டே நடக்கிறேன். உடம்பு ஒடிய பாடுபட்டாலும் விவசாயியின் வாழ்க்கை என்றுமே வட்டத்துக்குள் சதுரமாகவே இருக்கின்றது.

முற்றும்....

எழுதியவர் : Ranjeni K (5-Jun-20, 2:02 pm)
சேர்த்தது : Ranjeni K
பார்வை : 132

மேலே