546 உயிர்கனி காய்காலம் உதவினோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 4
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
வேறுவே றான சீவ
..விகற்பமு நிறம்பல் வாய்ந்து
நாறுபூ இலைகா யார்ந்த
..நளிர்தரு வினமுங் குன்றும்
ஊறுநீர்த் தொகையுஞ் சீவர்
..உய்ந்திடக் கார்முன் னாக
ஆறுகா லப்ப குப்பும்
..வகுப்பவன் சகப்பி ரானால். 4
– தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
பல்வேறுவகையான அளவிலா உயிர்க்கிழவராகிய ஆன்மாக்களும், அவை உய்யப் பல நிறம் வாய்ந்த மணமுள்ள பூ இலை காய் கனி உதவும் நெருங்கிய பல பயன்மரங்களும், வானளாவிய வளமிக்க மலைகளும், நீர்நிலைகளும், கார்கால முதலாக மாறி மாறி வரும் அறுவகைப் பருவங்களும், அமைத்து அருளினவன் உலக முதல்வன்.
சீவவிகற்பம்-உயிர்வகை. தரு-பயன்மரம். அறுவகைப்பருவம்-கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன. இவற்றுற்குரிய மாதங்கள் முறையே ஆவணி முதலாக இவ்விரண்டாகும்.
சகம் - உலகம். பிரான் - முதல்வன்.