305 செய்வோரைத் திருத்தவே செய்கையிற் சினமுறல் - சினம் 11
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் காய் விளம் காய் விளம் காய் விளம்)
உருமினை யஞ்சியாரு மிகழுவ ரன்றியாய
..ஒலிதரு கின்றகாரை முனிவரோ
தருவுறை கின்றதீய முயிறுக ளன்றியாய
..தருவைவெ குண்டுசீறல் தகுதியோ
அருமறம் மீதுபகை செயலன்றி நாளுமவை
..புரிகின்ற தீயதோர் அசடர்பால்
பெருமுனை கொண்டுகாய்தல் அழகல வென்றுகோதில்
..பெரியவர் என்றுமாள்வர் கலரையே. 11
- சினம்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”இடிக்கும், மின்னலுக்கும் பயந்து எல்லோரும் அவற்றை இகழ்வர். அத்தகைய இடி ஒலியைத் தருகின்ற மேகத்தைச் சினப்பார்களா? பெரிய மரங்களில் வாழ்கின்ற கொடிய கடிஎறும்புகளை அல்லாமல், அம்மரங்களின் மீது கோபம் கொண்டு வெறுத்துக் கண்டனம் செய்வது சரியா?
கொடிய பாவத்தின்மீது பகை கொள்வதல்லாமல், தினமும் பாவவினையைச் செய்யும் கொடிய அறிவற்றவர்களிடம் பெரும் கோபம் கொண்டு கடிந்து கொள்வது அழகில்லை என்று குற்றமற்ற பெரியவர்கள் எந்நாளும் அத்தீயவர்களை நல்வழிப் படுத்துவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
உரும் - இடி. தரு - மரம். முயிறு - கடிஎறும்பு. அரும் - கொடிய.
மறம் - பாவம். அசடர் - அறிவற்றவர். கோதில் – குற்றமில்லாத,
கலர் - தீயவர், ஆள்தல் - நல்வழிப்படுத்தல்.