ஊதும் குரங்கு

கங்கைகொண்ட சோழேச்சுவரம் என்றொரு திருத்தலம் இருக்கிறது. அங்கு கோயில் கொண்டிருக்கும் ஈசரைச் சிறப்பித்துப் பாடுகிறார் புலவர். பாடுபவர், சோழனின் இலங்கை வெற்றியையும் சேர்த்தே பாடுகிறார்.

நேரிசை வெண்பா

காவலன் எங்கள் கனவைப்பாஞ் சோழேசன்
மாவலி கங்கை மணிவாரி - ஆவனலென்
றப்புளங்கை தோய்க்க வதில்வா ரியமுத்தைக்
கொப்புளமென்(று) ஊதுங் குரங்கு. 125

- கவி காளமேகம்

பொருளுரை:

எங்களைக் காக்கும் பெருமானும், எங்களுடைய சிறந்த சேமநிதி போன்றோனுமான சோழமன்னவன், மிக்க ஆற்றலுடையவனாகச் சென்று வெற்றி கொண்டு, மாவலி கங்கைக் கரையிடத்தே கிடைத்த இரத்தினங்களைத் தன் கையிலே வாரி, 'ஆ நெருப்புக் கங்குகள்!' என்று சொல்லியவனாகத் தண்ணீரினுள் தன் அழகிய கைகளைத் தோய்த்தான். கைகளை மேலே அவன் எடுக்கும் போது வாரிக் கொணர்ந்த முத்துக்களைக் குரங்கானது அந்நெருப்புச் சுட்ட கொப்புளங்கள் என்று கருதி ஊதுவதாயிற்று.

இது கற்பனைதான், என்றாலும் இதனிடத்தே காணப் படுகின்ற நயத்தினைக் கண்டு இன்புறுக செம்மணிகள் நெருப்புக் கங்குகளாகவும், அடுத்து வாரிய முத்துக்கள் நெருப்புச் சுட்ட கொப்புளங்களாகவும் கூறப்பட்டமை காண்க. 'மாவலி கங்கை' இலங்கையிலுள்ள பேராறு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jun-20, 7:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

மேலே