குமரேச சதகம் – தக்க சமயத்தில் உதவாதவை - பாடல் 50

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்
கட்டிவைத் திடுகல்வியும்
காலங்க ளுக்குதவ வேண்டுமென் றன்னியன்
கையிற்கொ டுத்தபொருளும்

இல்லாளை நீங்கியே பிறர்பாரி சதமென்
றிருக்கின்ற குடிவாழ்க்கையும்
ஏறுமா றாகவே தேசாந் தரம்போய்
இருக்கின்ற பிள்ளைவாழ்வும்

சொல்லான தொன்றுமவர் மனமான தொன்றுமாச்
சொல்லும்வஞ் சகர்நேசமும்
சுகியமாய் உண்டென் றிருப்பதெல் லாம்தருண
துரிதத்தில் உதவா துகாண்;

வல்லான கொங்கைமட மாதுதெய் வானைகுற
வள்ளிபங் காளநேயா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 50

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

சூதாடு கருவி போன்ற கொங்கைகளையுடைய இளமங்கையான தெய்வயானையும் வேடர் குல வள்ளியும் விரும்பும் பங்காளனான காதலனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

கற்காமலே ஏட்டில் வரைந்து வீட்டிலே கட்டிவைத்த கல்வியும், விரும்பியபோது பயனுற வேண்டுமென்று அயலானிடம் கொடுத்த பணமும்,

தன் மனைவியை விட்டுவிட்டு மற்றவன் மனைவியை நிலையென்று நினைத்துவாழும் வாழ்க்கையும், மாறுபட்ட மனத்துடன் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கின்ற பிள்ளையின் வாழ்க்கையும்,

சொல்வதொன்றும் நினைப்பது ஒன்றுமாகப் பேசும் பொய்யர் நட்பும், நன்மையாகக் கிடைக்கும் என்று இருக்கும் இவைபோன்ற யாவும் இடுக்கணுற்ற காலத்து விரைவாகப் பயன்படா.

விளக்கவுரை:

வல் - சூதாடு கருவி, பாரி - மனைவி, தேச - அந்தரம் - தேசாந்தரம்: தீர்க்கசந்தி; வெளிநாடு.
அந்தரம் - முடிவு, சுகியம் - நன்மை,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jun-20, 10:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே