பூட்டிய வீடு
============
அம்மா இருந்தா
வெறுங்கையோடு அனுப்ப மாட்டாங்க
பயணம் போனவங்க
எப்போ திரும்புவார்களோ
என்ற ஏக்கத்தில் யாசகன்.
**
இருண்ட அறைக்குள்
இனி எப்போது
ஒளி விளக்கோ என்ற
விடை தெரியா கேள்வியோடு
காத்திருப்பில்
காவல் தெய்வங்கள்.
**
தனிமைப்படுத்தல்
நிலையத்திற்குக் குடும்பத்தோடு
சென்றிருப்பார்களோ என்ற
அச்சத்தோடு
உள்ளே நுழையத் தவித்திருக்கும்
திருடர்கள்.
**
வழிமேல் விழிவைத்து
காத்திருந்து காத்திருந்தே
வாசலில் வாடி நிற்கும்
பூச்செடிகள்
**
உரிமையாளர்கள்
பட்டினிப் போட்டுவிட்டுப்
பயணித்தப் பின்னாலும்
பசியோடு வாசலில் தூங்கும்
வளர்ப்பு நாய்.
**
வருவேன் என்று தெரிந்து
வீட்டைப் பூட்டிக்கொண்டு
உள்ளே இருக்கிறானோ என்ற
எண்ணத்தில்
கடன் கொடுத்தவன் என்று
ஒவ்வொருவரும்
சந்தேகப்படும்படியான
எல்லா வழிகளையும்
திறந்து வைத்தபடியே இருக்கிறது
பூட்டிய வீடு.
**
**