60 மெய்யுணர்ந்தார் துன்புறினும் பெருந்தகைமை விலகார் - ஞானாசிரியன் பெருமை 7

கலித்துறை
(புளிமாங்கனி கூவிளம் கூவிளம் தேமா தேமா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)

தலைகீழுறச் செய்யினுந் தீபம்விண் டன்னை நோக்குங்
கலைதேயினுந் தண்கதிர் வீசுமக் கங்குற் றிங்கள்
விலைமாமணி யைப்பொடி செய்யினு மின்ன றாது
நிலைநீங்குவ ரோதுயர் மேவினு நீர்மை யோரே. 7

- ஞானாசிரியன் பெருமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

“விளக்கினைத் தலை கீழாகப் பிடித்தாலும் சுடரொளி வானத்தையே நோக்கும். நிலவு நாள் தோறும் தேய்ந்து வந்தாலும் இரவில் வரும் அந்தச் சந்திரன் குளிர்ந்த கதிரையே வீசும். விலை மதிக்க முடியாத மாணிக்கக் கல்லைப் பொடி செய்தாலும் அதன் ஒளி விளக்கம் குன்றாது.

இவைபோன்று மெய்மை உணர்ந்த பெரியவர்கள் துன்பம் பெருகினாலும் பெருந்தன்மையிலிருந்து நிலை குலைவதில்லை” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

கங்குல் - இரவு. மின் - விளக்கம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-20, 8:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே