ஒப்பில்லா பெண்மயில்

ஒப்பில்லா பெண்மயில் !
-----------------------------------------
உன்னழகை விளித்திட
உள்ளத்தை உழுதேன் !
வித்திட்டவை பலனின்றி
விரயமானது எழுத்துகள் !
விளையாத நிலம்போல
விழலானது நெஞ்சமும் !

கற்பனைகள் எழுந்தென்ன
கவியெழுத இயலவில்லை !
சொற்கள்பல தெரிந்தென்ன
சொல்லாட்சி முடியவில்லை !
சிந்தனைகள் பிறந்தென்ன
சிந்தையில் தங்கவில்லை !

கல்கியின் நாவல்களை
படித்தும் நினைவில்லை !
சாண்டில்யன் வரிகளும்
சமயத்தில் உதவவில்லை !
கவியரசின் சிந்தனைகள்
கடுகளவும் எனக்கில்லை !

அறிந்தவையும் மறந்தது
அரவமின்றிப் பறந்தது !
வடித்திட நினைத்ததும்
வடிகாலில் வெளியேறியது !
இதயத்தில் படிந்திருந்தது
பிரதியாக இங்குபதிவானது !

ரவிவர்மா ஓவியமவள்
ரசிகனுக்கு காவியமவள் !
நிகரில்லா நிலமகளவள்
நினைவில் நிலைத்தவள் !
ஒளிரும் பொற்குவியல்
ஒப்பில்லா பெண்மயில் !

பழனி குமார்
21.06.2020

எழுதியவர் : பழனி குமார் (21-Jun-20, 12:56 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 3172

மேலே