1 அவளுடன் பேசும்போது

இன்று காலையில் நாநா பற்றிய கட்டுரை படித்தேன். சந்தர்ப்பங்களில் நீங்களும் ஓர் எழுத்தாளர்தான் என்ற குறுஞ்செய்தியை படித்தவுடன் நான் அதை அனுப்பிய அவளை பார்க்க கிளம்பினேன்.

அவள் சமைத்து கொண்டிருந்தாள்.

எப்போதும்போலவே அவளின் இரண்டு லேப்ராடர் நாய் குட்டிகளின் அதகளம் என்னை சூழ்ந்தது.

நான் அவைகளை கூட்டிக்கொண்டு வீட்டின் பின்னால் இருந்த தோட்டம் போன்ற ஒரு சரிவான நிலப்பகுதிக்கு சென்றதும் அவைகளின் கொண்டாட்டம் பெருகியது.

சற்று நேரத்தில் அவளும் அங்கே வந்தாள்.
மெசேஜ் பாத்தீங்களா ஸ்பரி...

நீ சொல்றது சரிதான். ஆனால் நான் சந்தர்ப்பவாதி இல்லை.

இருக்கலாம்...இருந்தாலும் உங்கள் கட்டுரையில் கவிதை மற்றும் படைப்புகளின் அடிப்படையில் நாநாவின் உழைப்பை இருட்டடிப்பு செய்தது மட்டும் உண்மை. இது நான் நேத்து எழுதின ஒரு குறிப்பு. படித்து பாருங்கள். உங்களுக்கு டீ கலந்துட்டு வரேன்... இருங்க...

அந்த குறிப்பில் இப்படி இருந்தது.

ஸ்பரிசன்... நீங்கள் எழுதிய அந்த கட்டுரை படித்தேன். நாநா ஒரு அப்பாவி என்பதும் அவன் ஆசைப்படுவது எழுத அல்ல எழுதும் கற்பனையில் வாழ மட்டுமே என்பதும் உங்கள் குறிப்புகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

உங்களின் சத்திய ஆவேசம் நாநாவை சமூகத்தில் மன்னிக்க முடியாத ஒருவனைப்போல் சித்தரிக்கிறது.
நாநா யார்? அவன் ஏன் எழுத வேண்டும்.?
அவன் ஏன் தத்துவம் சித்தாந்தங்களை மரபுகளை வெறுக்க வேண்டும் அல்லது அவன் ஏன் கொண்டாட வேண்டும்?

நாநா ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு கவிதையாக எழுதிக்கொண்டான்
அவன் மீது சமூகம் தரும் புகழ் அவனை காப்பாற்றுகிறது. அவன் வீட்டின் பஞ்சங்களை எதிர்க்கிறது.

நீங்களே ஒருமுறை எழுதி உள்ளீர்கள்.

"சில எழுத்தாளர்களை சந்திக்க நாம் புது ட்ரெஸ் தைக்க வேண்டும். சிலரை பார்க்க லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு பஸ்ஸில் ஏறி போய் விடலாம்"என்று... நாநா உங்களை வந்து பார்க்கும் எழுத்தாளன். நீங்கள் புறக்கணிப்பது அவன் எழுத்தை அல்ல. அவனுக்கு சேர்ந்த கூட்டத்தையும் புகழ்ச்சியையும்...

ஒரு மதமதப்பான சௌகர்யமான உலகத்தை நீங்கள் சின்னாபின்னம் செய்வது அழகல்ல. வாழ்வதும் வாழ விடுவதும் என்றால் அது அனைவரையும் ஒன்றாக சேர்த்துதான்.

அந்த குறிப்பு முடிந்தது.

படித்தீர்களா? என்றபடி டீயுடன் வந்தாள்.

நான் அவளிடமிருந்து டீயை வாங்கி கொண்டேன். ஏலம் மணத்தது.

அதற்கு உண்மையில் வரவேண்டிய ஒரு பொதுவான விமரிசனம்தான் எழுதி உள்ளாய். அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை என்றதும் சற்று மௌனமாய் இருந்தாள்.

"இசங்களுக்குள் ஏன் மனிதனை திணிக்கவேண்டும்? கவிதையில் ஏன் உணர்ச்சிவசப்படக்கூடாது?"

இசங்கள் மனிதரை தின்ன வரும் ஒன்றல்ல. அது திக்கை காட்டும் மானி என்று உனக்கு சொல்லி இருக்கிறேன் அல்லவா? நீ எதுவும் எழுதுவது இல்லை. உன் உலகம் நாய்குட்டிகளுடன் முடிந்தும் ஆரம்பித்தும் இருக்கும்போது அதற்காக உணர்ச்சி வசப்படுகிறாயா? என்றதும் சற்று நேரம் பேசாது இருந்தோம்.

செடிகளுக்கு தண்ணீர் விடவேண்டும் என்றாள்.

நீ அதை முடித்து விட்டு வா... நான் உன் அறையில் இருக்கிறேன். கம்ப்யூட்டரில் கொஞ்சம் வேலை இருக்கிறது என்றபடி வீட்டுக்குள் சென்றேன்.


🎐🎐🎐🎐🎐

எழுதியவர் : ஸ்பரிசன் (22-Jun-20, 5:49 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 82

மேலே