குடும்ப விளையாட்டு

எங்கள் வீட்டுக்குழந்தைகள் பேச்சு வந்த உடன் அனா, ஆவன்னா கற்றுக்கொள்வதற்கு முன் 1,2,3…ஆங்கிலத்தில் கற்றுக்கொண்டு விடுவார்கள். எங்கே 1,2,3 .. சொல் என்ற கேட்ட மாத்திரத்தில் 1,2,3,4,5,6,7,8,9,10,J,Q,K, A என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். எவ்வளவு சொல்லிக்கொடுத்தும், 11,12, 13,14,15….. என்று சொல்ல மாட்டார்கள். பழைய கால சினிமாக்களிலை குடும்ப பாட்டு என்று ஒன்று வரும். அதை வைத்துக் கதை நகரும். கிளைமேக்ஸ் சீன்லே காணாமற்போன குழந்தையை அந்த பாட்டு மூலமாக க் கண்டுபிடிப்பார்.

அதே போல எங்க குடும்பங்களில் குடும்ப ஆட்டம் ஒன்று உண்டு, அதுதான் சீட்டாட்டம். எங்க அங்கிள்கள் அதில் எக்ஸ்பெர்ட்ஸ். எனக்குத் தெரிந்து அவர்கள் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு மேலாக இந்த சீட்டாட்டத்தை ஒரு நாளின் கால் அல்லது அரை பாகத்தை விளையாடிப் பொழுதைக் கழிப்பார்கள். யாராவது பெரியவரையோ, சிறியவர்களையோ காணோமென்றால் ஏதாவது ஒரு அங்கிள் வீட்டு வராண்டாவில் சீட்டாடிக்கொண்டு இருப்பார்கள், சிறுவர்கள் அவர்களோடு உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண,டு இருப்பார்கள். அல்லது அங்கிள் தவறான கார்டைக் கழிக்காமல் அவர்களுக்கு அட்வைஸ் பண்்ணிக்கொண்டு இருப்பார்கள். புலிக்குப்பிறந்தது பூனையாகுமா? அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளையும் அவர்களுடைய சீட்டாட்டம் பாதித்தது. விளைவு, மேற் சொன்ன 1,2,3 …..

அந்த ஆட்டத்தில் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்தான் கலந்து கொள்வார்கள். வெளி ஆட்களை அனுமதிப்பதில்லை. ஸ்டேக்ஸ் மிக்க்குறைவாக இருக்கும். பொழுது போக்குக்காக மட்டுமே ஆடுவார்களேயின்றி, சூதாட்டமாகவோ, சம்பாத்யத்துக்காகவோ ஆடமாட்டார்கள்.

அவர்கள் வயதான பின் ஒவ்வொருவராக மறைய ஆரம்பித்தனர். அவர்களின் வாரிசுகளாகிய எங்கள் பலருக்கும் சென்னையில் வேலை கிடைத்தது. நாங்களெல்லம் ஒன்றுகூடி நம் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய குலதெய்வத்தொழுகை எப்படி பரமரபரையாக செய்து வருமோ அதேபோல் எங்கள் குடும்ப விளையாட்டைத் தொடர ஆரம்பித்தோம்.

எங்கள் ஊரில் போல் அல்லாது, நாங்கள் சென்னையில் வெவ்வேறு இடங்களில் பரவலாக வசித்து வந்ததால், மாதம் ஒரு முறை டர்ன்போட்டுக்கொண்டு யாராவது ஒருவர் வீட்டில் குடும்பத்தோடு கூடுவோம். பகல் 2 மணிக்கு எல்லோரும் கூடி விளையாட்டை ஆரம்பிப்போம். நாலுமணி அளவில் வந்திருக்கும் அனைவருக்கும் டிபன் அளிக்கப்படும். அது யார் வீட்டில் கூடுகிறோமோ அவர்கள் பொறுப்பு. விளையாட்டு முடியும்போது இரவு 9 மணி ஆகும்.

ஆட்டம் முடிந்தவுடன் கலவை சாதம், தயிர் சாதத்துடன் இனிதே கூட்டம் முடியும். வீட்டிற்குப்போகும்போது ரொம்பவும் லேட் ஆகிவிடுமாகையால், இந்த ஏற்பாடு. இந்த கெட் டுகெதருக்கு( Get together) நாங்கள் சூட்டிய பெயர் Meeting, Eating and Cheating. அதாவது, முதலில் சந்திப்பு ( Meeting), இடையிடையே சாப்பாடு(Eating) தொடர்ந்து சீட்டு விளையாடுதல் ( Cheating) Cheating என்பதே சீட்டாட்டம் விளையாடுதலின் சுருக்கம். சீட்டாட்டத்தில் கொஞ்சம் சீட்டிங்( real cheating) இல்லாமல் இருக்குமா? எனவே எங்க இந்த ப்ரோக்கிராமுக்கு சுருக்கமாக MEC என்று பெயர் வைத்திருந்தோம். ஆண்களுக்கு சீட்டுக்கச்சேரியுடன் சாப்பாடு. பெண்களுக்கோ முழு நேர அரட்டைக் கச்சேரியுடன் சாப்பாடு.

இது மாதம் ஒருநாள் ஒவ்வொருவர் வீட்டில் நடக்கும். ஒவ்வொருவரும் ஒரு மூலையில் இருப்பதால் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள இது சரியான சந்தர்ப்பம். நாளாக நாளாக மத்தியானம் டிபன் ஒரு ஸ்வீட், காரம், காபி என்று ஆரம்பித்து சமயத்தில் ரெண்டு ஸ்வீட், இரண்டு காரம், காபி, ஜஸ்கிரீம் என்று பெருகிக்கொண்டே போனது. ஒரு தடவை கூடினால் அதற்கான செலவு பழையகால நிச்சத்தார்தத்துக்கான செலவாய் அதிகரித்துக்கொண்டே போனது. இப்படி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழிந்தன.

எங்களிலும் பலரும் ஒருவரொருவராய் மறையலானோம்.. 1990 க்குப்பிறகு கோரம் இல்லாமல் இந்த MEC கச்சேரி ஓய்ந்தது. இப்பொழுது இந்த மாதிரி ஒரு MEC அரேஞ்ச் பண்ணவேண்டுமென்றால் அமெரிக்காவுக்குத்தான்போக வேண்டும். அங்கே தான் எங்கள் வாரிசுகள் இப்போது இருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு சிறு நம்பிக்கை இந்த குடும்ப விளையாட்டை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்று. என்ன இருந்தாலும் எங்கள் வழி வந்த குழந்தைகளின் ஜீன்ஸிலே சீட்டாட்டம் ஒட்டாமல் எங்கே போகும்? இன்றைக்கும் எங்கள் பேரக்குழந்தைகளுக்கு 8,9,10 க்குப்பிறகு J,Q,K, A தான்

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு)8 (23-Jun-20, 2:59 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
Tanglish : kudumba vilaiyaattu
பார்வை : 76

மேலே