இனியில்லை மரத்தட்டுப்பாடு

ஈர்ப்புவிசை உள்ளவரை
விரிந்து கிடக்குது
எங்கள் உலகம்

உங்கள் கால்கள்
படரும் பரப்பை விட​
எங்கள் இறக்கைகளின் புழக்கம் விசாலமானது

நன்மையை மட்டும் விதைத்திடும்
உன்னத​ படைப்புகள் நாங்கள்

இறைச்சிகளாய் மட்டுமெங்களை
குறைத்து மதிப்பிடாதீர்!
இயற்கையின் காவலர் நாங்கள்
அது விரும்பும் காதலும் நாங்களே!

இயற்கையை பாதுகாப்போம் என்று
நாங்கள் கூட்டம் கூட்டுவதில்லை
பேட்டி கொடுப்பதில்லை
என்றும் நாங்கள் நடிகர்களாக​ மாறுவதில்லை
நாங்கள் நாங்களாகத்தான் வாழ்கிறோம்

கையில் அலைபேசியுடன்
உறைந்து கிடக்கும்
உங்களைப் பார்க்கும்பொழுது
எங்களை விரட்ட​
சோளக்கொல்லை பொம்மைகள்
இனி தேவையில்லை உங்களுக்கு!

உங்கள் பயிர்களை விட​
அதை அழித்திடும் பூச்சிகளும் புழுக்களுமே
எங்களுக்கு பிடித்த​ உணவு
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
புரியவைத்திருக்கும் உங்களுக்கு

சாலையோர​ மரங்கள்
இனி தேவையில்லை உங்களுக்கு
குளிரூட்டப்பட்ட​ ஊர்திகளில் பயணம்
சாலையோர​
அழகுச் செடிகளைப் பார்த்துக்கொண்டே

இப்பொழுதெல்லாம்
மரங்களின் பற்றாக்குறை
எங்களுக்கும் தெரிவதில்லை
ஏனென்றால்..
எங்களின் எண்ணிக்கையும் குறைந்தன​ அவ்வளவே!

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (25-Jun-20, 10:25 pm)
பார்வை : 76

மேலே