தமிழ் படி
அயலவன்!
அவனை விட்டுவிடு!
அண்டிப் பிழைக்க வந்தவனுன்
அடையாளத்தை அழித்து
அமிழ்தில் அமிலத்தை ஊற்றி
அசிங்கப்படுத்துபவனுக்கு அன்னைத்தமிழின்
அருமை எப்படி விளங்கும்!
அவனை விட்டுவிடு!
இம்மண்ணிலே பூத்த மலரினில் மொழி எனும் மணம் எங்கே போனது!
கேளிக்கையில் காலம் கழித்துக் கெட்டொழியும் கூத்தினைக் கைவிடு!
எங்கு வீழ்ந்தோம் என்ற சிந்தயை உந்து!
ஆரிய அரேபியா ஆங்கில வருகையில்
ஆகாஷ் என்றும் அன்வர் என்றும் ஆல்பர்ட் என்றும் மாறிப்போனாய்!
சாதி சமய சாத்திர
சதியினிலே ஊறிப்போனாய்!
அரசியல் பிழைத்த அற்பர்களுக்கு ஊறுகாய் ஆனாய்!
அறத்துடன் பொருள் சேர்த்து இன்பமாய் வாழும் சூத்திரத்தை சேற்றில் வீசி
ஆசைக்கும் அகந்தைக்கும்
அளவிலா பொருள் ஈட்ட
தன்மானத்தை தகர்த்தெறிந்து
தரணியெங்கும் இடம் பெயர்ந்தாய்!
தாய்நிலத்தை தரங்கெடுக்கும்
தீயவரை வளர்த்தெடுத்தாய்!
உலகமயமெனும் மாயக்காற்றில்
கற்பூரமாய் கரைந்திடாமல்
கரை சேரும் வழியொன்றை கண்டெடுப்பாய்!
ஒன்றை இன்றே நன்றாய் செய்!
தமிழ் படி!
இக்கணம் படி!
இலக்கணம் படி!
விளங்கும்படி
இலக்கியம் படி!
சான்றோர் வளர்த்த தமிழை சார்ந்தோர்க்குணர்த்து!
மற்றது மனம் போல் மாறும்!