அவளுக்குள் சிறுகதை

அவளுக்குள் (சிறுகதை)
அன்று மதிய இடைவேளையில் டிபன் பாக்ஸை திறந்து வைத்துவிட்டு, ஏதோ சிந்தனையில் ழுழ்கினாள் கயல்விழி.
ஏய் கயல், என்னடி உணவு அருந்தாமல் தீவிரமாக யோசனை? எந்தக் கோட்டையை எட்டிப்பிடிக்க…. இது தோழி வசந்தாவின் கம்பீரமான குரல். அது எதுவும் காதில் விழாமல் வெறித்தபடி யோசனையில் ஆழ்ந்தாள். ஆம் இன்னும் 1 வருடம். ஓய்வூதியம் பெறும் வயதை எட்டியிருந்தாள் அவள்.
அப்பா! 15 வயதில் பள்ளிப்பருவம் முடித்து பணியில் சேர்ந்தது; எத்தனை இடத்தில் பணியில் அமர்ந்தது; தனியார் பணியிலேயே வாழ்க்கையை முடித்தது; செவிப்புலன் குன்றி, கண்பார்வை மங்கி, உடல் நோய்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து சிக்கெனப் பற்றிக்கொள்ள…..
இளம் வயதில் கிடைக்காத திருமண வாழ்க்கை, அவள் விரும்பாமலேயே முதுமையில் கிடைத்து, அதனையும் தொலைத்து, எத்தனை எத்தனை அவமானங்கள், பழிச்சொற்கள், …
என்ன படித்து என்ன? எத்தனை கல்வி கற்றுதான் பயன் என்ன? எத்தனைத் தொழில் திறம் இருந்துதான் என்ன? எத்தனை திறமைகள் இருந்துதான் என்ன? ஒரு துளி விஷம் பாலில் கலந்தாலும் விஷம் விஷம் தானே!
அது போன்றுதான் அவள் எதிர்ப்பாராத வாழ்க்கையும், இளம் வயதில் அவளும் அந்த வயதிற்கே உரிய பல சிறு சிறு குறும்புகளைச் செய்துதான் இருந்தாள். மறுக்கவில்லை.
அவள் அறிந்தும் அறியாமலும் இழைத்த பல தீமைகள் அது ஒரு நீண்ட பட்டியல்…. என்று தான் சொல்லவேண்டும்.
என்ன செய்வது…. விதி யாரையும் விட்டுவைப்பதில்லையல்லவா? முற்;கருமவினை, இக்கருமவினை இது தொடர்ச்சிதானே?
இறைவுணர்வில் வாழ்ந்து கொண்டிருந்த அவளை…. இறைவன் பலவழிகளிலும் சோதிக்கிறான்…. சோதிக்கிறான்…. சோதிக்கிறான்…. துவள்கிறாள். அழுகிறாள்….பல தடைகளைத் தனியொருவளாய்த் தகர்த்தெறிந்து சாதனைகள் பலவும் படைக்கத்தான் செய்கிறாள்…. இருப்பினும் வாழ்த்துவோர் இல்லை. பாராட்டாவிட்டாலும் வசைபாடும் கூட்டம் அவளை சிறுபிராயம் முதல் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன.
வயதாகிவிட்டது.. சக்தியில்லை… உடல் உழைப்பை எல்லாம் பிறருக்காகவே நல்கி நல்கி. இன்றளவும் பல ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேட்டுக் கேட்டு…. அப்பப்பா…! ஏன் தற்கொலை முயற்சிக்குக் கூட ஆட்பட்டாள். இருப்பினும் அவள் உள்ளம் திடமானது. உரமூட்டி வளர்த்த தந்தையின் அன்பு கட்டளை அவளை உயிரை மாய்க்க விடாமல் தடுக்கின்றது.
என்ன செய்வாள்? எங்கு செல்வாள்? வேலையில் இருக்கும் பொழுதே இத்தனை துயரங்கள் என்றால், இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள்… தான் அதன்பிறகு….. அப்பா ! எண்ணவே அவள் அஞ்சுகிறாள். முதியோர் இல்லங்களைத் தேடி அலைந்தாள்? அங்கும் பணம்…. பணம்…. பணம்…. தந்தால் மட்டுமே பார்த்துக்கொள்ளத் தயாராக இருந்தனர், அவர்களைக் குறை கூறுவதிலும் அர்த்தம் இல்லையே! காலத்தின் கொடுமை… விலைவாசி உயர்வு…. இது என்ன? சங்ககாலமா என்ன….? சத்திரங்கள் பல கட்டிப்போட்டு இலவச உணவளிக்க… அதுவும் “தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு…” என்று கவிஞன் கூறிய வாக்கிற்கிணங்க…. சுயநலம் பெருகிவிட்ட காலக்கட்டத்தில்…..ஏன் பெத்த தாய் தகப்பனையே முதியோர் இல்லத்திலும் அனாதை விடுதியிலும் கொண்டு சேர்க்கும் காலக்கட்டத்தில். இதையும் தாண்டி நடுத்தெருவில் விட்டு அனாதையாக விட்டு விடும் காலக்கட்டத்தில்….. நோயாளியான அவளை யார் பார்ப்பார்கள்? சொல்லுங்கள்? குனிந்தால் நிமிரமுடியவில்லை. படுத்தால் உறக்கமில்லை…. ஓடி ஆடி பணிபுரியும் வயதும் அல்ல…. ஏன் இந்த இறைவன் இத்தனைக் கொடூரமாக இருக்கிறான்? வாழவேண்டும் என்று கனவுகாணம் சிறார்களை அழைத்துச் செல்கிறான்… வயது வேறுபாடின்றி… ஆனால் கயல்விழியைப் போன்றோரை மட்டும் ஏன் வாட்டி வதைக்கிறான்….
தேடுகிறாள் “ யூ டீயூபில்” கர்மவினை தீர இதைச் செய்யுங்கள்… அதைச் செய்யுங்கள்…. எத்தனை எத்தனை பதிவுகள்…. அலசுகிறாள். ஓயாமல் இறைவழிபாடும் தான் இயற்றுகின்றாள்.. அனைவரும் இருக்கின்றனர். இருப்பினும் அவள் ஓர் அனாதை…..
ஏய் கயல்….. என்ன? நீண்டநேரமாக கூப்பிடுகிறேன். என்ன யோசனை? வசந்தா உலுக்கிக் கேட்டபின். மீண்டும் சுயநினைவு வரப்பெற்றவளாய்…. ஒன்றுமில்லை…. தாய்த் தந்தையரும் இன்றி…. கணவன் இருந்தும்……..? என்….எதிர்காலம்….. என்று கண்ணீர் தாரை தாரையாய் வழிந்து ஆறாக ஓட…. தோழி வசந்தா மெல்லத் துடைக்கிறாள் தன் கைக்குட்டையால் அவள் கண்களை. எத்தனை கயல்விழிகள் இதுபோன்று இவ்வுலகிலே.
இது கட்டுக் கதையல்ல…. உண்மைச் சம்பவம்…. இன்றும் (26.06.2020) வெள்ளிக்கிழமை மாலை மணி 6.40…. கயல்விழி காலனின் வரவிற்காகக் காத்துக்கொண்டு தினசரி காலண்டரில் பக்கங்களைக் கிழித்துக்கொண்டிருக்கிறாள். விடியுமா?
குறிப்பு: யாரும் கயல்விழிக்காக அழக்கூடாது என்பதனால் இதில் எண்ணற்ற செய்திகள் விரிவாக எழுதப்படாமல் குறிபால் உணர்த்தப்படுகின்றது.
அன்புடன்
திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி
தமிழாசிரியை...
கோயம்புத்தூர் 22

எழுதியவர் : திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி (26-Jun-20, 7:08 pm)
பார்வை : 104

மேலே